Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்; இந்திய அணி வீரர்கள் நியூசண்டிகர் வருகை: நாளை பயிற்சியை தொடங்குகின்றனர்

நியூசண்டிகர்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது. இதில் டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் நியூசண்டிகரில் வரும் 6ம்தேதி தொடங்க உள்ளது. இதற்காக சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ரிஷப் பன்ட்டிற்கு பதிலாக கே.எல்.ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜெய்ஸ்வால். சாய்சுதர்சன், ரிஷப் பன்ட், தேவ் தத் படிக்கல், நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா , துருவ் ஜூரல் ஆகியோருடன் புதுமுகங்களாக மனவ் சுதார், குர்னூர் பரார், ஹர்ஷ் துபே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் முதல் குழுவினர் நியூ சண்டிகர் வந்தடைந்தனர். கே.எல்.ராகுல், ரிஷப்பன்ட், ஜெய்ஸ்வால் உள்ளிட்டோரும் அதில் அடங்குவர். ஐபிஎல் பைனலில் ஆடிய கேப்டன் சுப்மன்கில், சாய்சு்தர்சன், மாவன் சுதார், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, தேவ்தத் படிக்கல், வாஷிங்டன் சுந்தர். குர்னூர் பிரார் ஆகியோர் இன்று அணியுடன் இணைகின்றனர். நாளை முதல் இந்திய அணியினர் பயிற்சியை தொடங்க உள்ளனர். ஆப்கானிஸ்தான் அணியினர் கடந்த 27ம் தேதி இந்தியா வந்தனர். ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஒமர்சாயை தவிர அனைவரும் சண்டிகர் வந்துபயிற்சியை தொடங்கி விட்டனர்.

ரோகித் சர்மா, பாண்டியாவுக்கு அழைப்பு

ஆப்கனுக்கு எதிராக ஒருநாள் போட்டி தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ள ரோகித்சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வருமாறு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது. இருவரும் அணியில் இடம்பெற்றிருந்தாலும் உடற்தகுதியை பொறுத்தே போட்டிகளில் பங்கேற்பார்கள் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இருவரும் உடற்தகுதியை நிரூபிக்க அழைக்கப்பட்டுள்ளனர். அதன்படி பாண்டியா பெங்களூரு வந்துள்ளார். ஆனால் ரோகித்சர்மா வருகை பற்றி எந்ததகவலும் தெரியவில்லை.

ஸ்பின் பயிற்சியாளராக சாய்ராஜ் பாஹுதுலே

அண்மை காலமாக இந்திய அணி டெஸ்ட்டில் தடுமாறி வருகிறது.உள்ளூரில் கூட தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதனால் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சுக்கு வலு சேர்க்கும் வகையில் பயிற்சியாளராக முன்னாள் வீரர் சாய்ராஜ் பாஹுதுலே நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் இல்லாமல் இருந்த நிலையில் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் கோரிக்கையினை ஏற்று பாஹுதுலே நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்திய அணிக்காக 2 டெஸ்ட், 8 ஒருநாள் போட்டிகளில் ஆடி உள்ள அவர் ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் பயிற்சியாளராக இருந்தார். தற்போது அந்த பணியில் இருந்துவிலகி இந்திய அணியுடன் இணைகிறார்.

7நெட் பவுலர்கள்!

இந்திய அணியின் பயிற்சிக்கு உதவும் வகையில் 7 இளம் பவுலர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில், “குர்ஜப்னீத் சிங், அக்கிப் நபி, பிரின்ஸ் யாதவ், சரண்ஷ் ஜைன், ஜீஷன் அன்சாரி, ஷிவாங் குமார் உள்ளிட்ட 7பேர் டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணிக்கு உதவும் வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்களாக இணைந்துள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி பளு காரணமாக முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா போன்ற முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் வலைப்பயிற்சியில் முழுமையாகப் பந்துவீச முடியாது. பேட்ஸ்மேன்களுக்குப் போதிய பயிற்சி அவசியம் என்பதால் 7பேர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.