புதுடெல்லி: வாட்ஸ் அப்பில் சமீபத்தில் சில பயனர்களுக்கு, ‘இந்தியாவில் வரவிருக்கும் சட்டங்களின்படி உங்கள் வயதை கேட்க வேண்டியுள்ளது’ என்ற குறிப்புடன் பிறந்த தேதியை சேர்க்குமாறு அறிவிப்பு அனுப்பப்பட்டது. இது குறித்து வாட்ஸ் அப் செய்தி தொடர்பாளர் அளித்த விளக்கத்தில், ‘‘இந்தியாவில் அமலுக்கு வரவுள்ள டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் போன்ற சட்டங்களுக்கு இணங்க, பயனர்கள் தங்களது வயதை உறுதிப்படுத்தும் தனியுரிமை பாதுகாப்பு முறைகளை நாங்கள் சோதனை செய்து வருகிறோம்.
இதனால் வாட்ஸ்அப்பின் செயல்பாட்டிலோ அல்லது பயனர்களின் அனுபவத்திலோ எந்த மாற்றமும் ஏற்படாது. வயது தொடர்பான தகவல்கள் தனிப்பட்டவை. அவை மற்ற வாட்ஸ்அப் பயனர்களுடன் பகிரப்படமாட்டாது. மேலும், இது ஒரு விருப்பத்தேர்வு சோதனை மட்டுமே என்பதால், வயதை உறுதிப்படுத்தாவிட்டாலும் பயனர்கள் தொடர்ந்து வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.


