இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமி போதனா சிவானந்தன், செஸ் விளையாட்டில் சர்வதேச மாஸ்டர் (International Master - IM) பட்டத்துக்கான தகுதியைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், செஸ் வரலாற்றில் இந்தப் பட்டத்தைப் பெறும் மிக இளம் வயது வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். ஹங்கேரியைச் சேர்ந்த புகழ்பெற்ற செஸ் வீராங்கனை ஜூடித் போல்கர், கடந்த 1988ஆம் ஆண்டு தனது 12 வயதில் படைத்த சாதனையை, 38 ஆண்டுகளுக்குப் பிறகு போதனா முறியடித்துள்ளார்.
ஐந்து வயதில் தொடங்கிய செஸ் பயணம்
வடக்கு லண்டனின் ஹாரோ பகுதியில் வசிக்கும் போதனா, தமிழ்நாட்டைச் சேர்ந்த குடும்பப் பின்னணியைக் கொண்டவர். இவரது தந்தை திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர். சிறுவயதிலிருந்தே செஸ் விளையாட்டில் ஈடுபாடு கொண்ட போதனாவுக்கு, தனது 5வது வயதில் இதன் மீது ஆர்வம் ஏற்பட்டது.
கொரோனா ஊரடங்கு காலத்தில், இந்தியாவுக்குச் சென்று திரும்பிய குடும்ப நண்பர் வழங்கிய செஸ் பலகையைப் பார்த்தார் போதனா. அதன் காய்களின் அமைப்பையும், விளையாடும் முறையையும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்ட அவர், காணொளிகள் வாயிலாகவும் தீவிரப் பயிற்சி மேற்கொண்டார். நாளடைவில் இந்த ஆர்வம் தீவிரமான பயிற்சியாக மாறி, அவரை அடுத்தடுத்த வெற்றிப் படிகளுக்கு அழைத்துச் சென்றது.
38 வருட சாதனையை முறியடித்த தருணம்
செஸ் விளையாட்டில் ‘சர்வதேச மாஸ்டர்’ என்பது கிராண்ட்மாஸ்டர் பட்டத்துக்கு அடுத்த நிலையிலுள்ள உயரிய அங்கீகாரமாகும். இந்தப் பட்டத்தைப் பெற வீரர்கள் சர்வதேசப் போட்டிகளில் மூன்று முறை குறிப்பிட்ட செயல்திறனை வெளிப்படுத்தி, தேவையான ரேட்டிங் அளவை எட்ட வேண்டும்.
2026ஆம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய மகளிர் செஸ் கிளப் கோப்பைப் போட்டியில், ஸ்வீடனின் வுமன் இன்டர்நேஷனல் மாஸ்டர் விக்டோரியா ஜோஹான்சனை இறுதிச் சுற்றில் எதிர்கொண்டார் போதனா. இந்த ஆட்டத்தில் 32வது நகர்வில் வெற்றி பெற்று, தனது மூன்றாவது மற்றும் இறுதித் தகுதியை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
ஏற்கெனவே பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர்
போதனாவின் இந்தச் சாதனை அவரது முதல் பெரிய வெற்றி அல்ல; இதற்கு முன்பும் பல மைல்கற்களை எட்டியுள்ளார்:
*2025-ல்: கிராண்ட்மாஸ்டர் ஒருவரை வீழ்த்திய இளம் வயதுப் பெண் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.
*மிக இளம் வயதில் ‘வூமன் இன்டர்நேஷனல் மாஸ்டர்’ பட்டத்தைப் பெற்றார்.
*2026-ல்: பிரிட்டிஷ் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்தார். மேலும், அதே ஆண்டில் ‘வூமன் கிராண்ட்மாஸ்டர்’ பட்டத்துக்கான தகுதிகளையும் நிறைவு செய்துள்ளார்.
படிப்புடன் இணைந்த இசை மற்றும் செஸ் ஆர்வம்
தற்போது ஆறாம் வகுப்பு பயின்று வரும் போதனாவுக்கு, கணிதமும் செஸ் விளையாட்டின் இறுதிக்கட்ட நகர்வுகளும் மிகவும் பிடிக்கும். செஸ் விளையாட்டைத் தாண்டி வயலின், பியானோ போன்ற இசைக்கருவிகளையும் அவர் ஆர்வமாகக் கற்று வருகிறார். பள்ளிப் படிப்பு, சர்வதேசப் போட்டிகள் மற்றும் தீவிரப் பயிற்சி என அனைத்தையும் தனது இளம் வயதிலேயே திறம்படச் சமாளித்து வருகிறார்.
அடுத்த இலக்கு கிராண்ட்மாஸ்டரா?
சர்வதேச மாஸ்டர் பட்டத்துக்கான தகுதிகளை எட்டியிருக்கும் போதனாவின் அடுத்தகட்ட நகர்வைச் செஸ் உலகம் ஆவலுடன் உற்றுநோக்குகிறது. கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை நோக்கி அவர் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
ஐந்து வயதில் ஒரு எளிய செஸ் பலகையில் தொடங்கிய ஆர்வம், இன்று 11 வயதில் உலக சாதனையாக வளர்ந்துள்ளது. அசைக்க முடியாத திறமையும், விடாமுயற்சியும், முறையான பயிற்சியும் இருந்தால் இளம் வயதிலேயே உலக அரங்கில் சாதிக்க முடியும் என்பதற்கு போதனா சிவானந்தனின் பயணம் ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது!
- ஆ.கவின்


