Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

இந்திய வான்படையின் முதல் ஏர் மார்ஷல்: பத்மாவதி பண்டோபாத்யாய்!

விமானத்தை ஓட்ட வேண்டும் என்ற கனவோடு இந்திய விமானப்படையில் சேர்ந்தவர் பத்மாவதி. மொழித் தடைகள், பெண்களுக்கு மிகக் குறைவாக இருந்த வாய்ப்புகள் எனப் பல சவால்களை எதிர்கொண்ட அவர், தனது அறிவு, உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இந்திய விமானப்படையின் மிக உயரிய பதவியை அடைந்த முதல் பெண்மணி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.

ஆண்கள் தயங்கிய சூழலில் நம்பிக்கையைப் பெற்ற மருத்துவர் பத்மாவதி விமானப்படையில் பணியாற்றிய காலத்தில், அங்கு பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. ஆண் விமானிகள் தங்களது உடல்நலச் சிக்கல்களைப் பெண் மருத்துவரிடம் பகிர்ந்துகொள்ளத் தயங்கினர். விமானிகளின் பணிச்சூழலை நேரடியாகப் புரிந்துகொண்டால் மட்டுமே அவர்களின் நம்பிக்கையைப் பெற முடியும் எனக் கருதிய பத்மாவதி, கணவரின் ஊக்கத்தால் அவர்களுடன் விமானங்களில் பயணித்து நெருக்கமான புரிதலை உருவாக்கினார்.

வான்வழி மருத்துவத் துறையில் சிறப்புப் பயிற்சி பெற்று, 1975-இல் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டயம் முடித்தார். விமானப் பயணத்தின்போது ஏற்படும் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் சிறப்பு உடைகள் குறித்து ஆராய்ந்தார். க்நாட், ஹண்டர், மிக்-21 உள்ளிட்ட போர் விமானங்களிலும் பயணித்துத் தனது ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

குறைமாதக் குழந்தைகளைக் காப்பாற்றிய கண்டுபிடிப்பு 1970-களின் தொடக்கத்தில், குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கான காப்பகக் கருவியைத் தற்காலிகமாக உருவாக்கி, மிகக் குறைந்த எடையுடன் (750 கி, 1 கி, 1.20 கி) பிறந்த மூன்று குழந்தைகள் உயிர் பிழைக்க உதவினார். மருத்துவரீதியாகக் கடினமான சூழலில் இவர் மேற்கொண்ட இம்முயற்சி, இவரது மருத்துவத் திறமைக்கும் மனிதநேயத்திற்கும் சான்றாக அமைந்தது.

போர்க்களத்தில் பின்வாங்காத மன உறுதி 1971 இந்தியா பாகிஸ்தான் போரின்போது, பஞ்சாபின் ஹல்வாரா விமானப்படை மருத்துவமனையில் ஆபத்தான சூழலிலும் பொறுப்புடன் பணியாற்றினார். போர்க்காலச் சேவைக்காக பத்மாவதிக்கும் அவரது கணவர் சதிநாத் பண்டோபாத்யாய்க்கும் ஒரே விழாவில் ‘விசிஷ்ட் சேவா பதக்கம்’ வழங்கப்பட்டது. இந்திய விமானப்படையில் பணியாற்றிய தம்பதியர் இருவரும் இவ்விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்க சாதனை.

ஆர்க்டிக் பகுதியிலும் ஆராய்ச்சி உயரமான மலைப்பகுதிகளில் பணியாற்றும் வீரர்களின் உடல்நலம் மற்றும் நுரையீரலில் திரவம் தேங்கும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தார். 1989 மற்றும் 1990-ஆம் ஆண்டுகளில், மைனஸ் 55 டிகிரி செல்சியஸ் வரை உறைபனி நிலவிய ஆர்க்டிக் பகுதிக்குச் சென்ற 10 வார ஆராய்ச்சிப் பயணத்தில் பங்கேற்றார். இதன் மூலம் வட துருவப் பகுதியில் அறிவியல் ஆராய்ச்சி மேற்கொண்ட முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

சாதனைகளும் பதவி உயர்வுகளும்

*1978: வெலிங்டன் பாதுகாப்புப் பணிகள் பணியாளர் கல்லூரிப் பயிற்சியை முடித்த முதல் பெண் அதிகாரி.

*2000: முதல் பெண் ஏர் கமடோர்; டெல்லி மத்திய மருத்துவ நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு.

*2002: முதல் பெண் ஏர் வைஸ் மார்ஷல்.

*2004 (அக்டோபர் 1): ஏர் மார்ஷல் பதவியை அடைந்து, மருத்துவச் சேவைகளுக்கான தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்ற முதல் பெண்.

37 ஆண்டுகள் மகத்தான சேவை ஆற்றிய இவருக்கு, 2021-ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம விருது வழங்கி கௌரவித்தது.

‘‘நினைத்த முதல் இலக்கை அடைய முடியாவிட்டாலும், திறமையையும் உறுதியையும் நம்பினால் மாற்றுப் பாதையில் இன்னும் உயர்ந்த சாதனையைப் படைக்க முடியும்” என்பதை பத்மாவதி பண்டோபாத்யாயின் வாழ்க்கை உலகிற்கு

உணர்த்துகிறது.

- ஆ. கவின்