Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இந்தியாவை உலக சுற்றுலாத் தலமாக்க வேண்டும்: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் வேண்டுகோள்

புவனேஸ்வர்: இந்தியாவை உலக சுற்றுலாத் தலமாக்க வெளிநாடுவாழ் இளம் இந்தியர்கள் முன்வர வேண்டும் என்று வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கேட்டுக்கொண்டுள்ளார். 18வது வெளிநாடுவாழ் இந்தியர் மாநாடு ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இன்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசிய ஜெய்சங்கர், “இந்தியாவை ஒரு சுற்றுலாவுக்கான மையமாக மாற்ற வேண்டும் என்னும் பிரதமர் மோடியின் விருப்பத்தை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். வெளிநாடுவாழ் இந்தியர்கள், வெளிநாட்டில் இருந்து தங்களுக்கு சமமான இளம் நண்பர்களை அழைத்து வர வேண்டும். அவர்கள், நமது தனித்துவமான வளமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை ஆராய வேண்டும்.

இது நிச்சயமாக வாழ்நாள் பழக்கமாக மாறும். தூய்மை இந்தியா, பெண் குழந்தைக்கான கல்வி, இலவச உணவுப் பொருட்கள் விநியோகம், முத்ரா, சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவி வழங்கும் திட்டம், வயதானவர்களுக்கான மருத்துவக் காப்பீடு, குழாய் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் என பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தியுள்ள திட்டங்கள் ஒவ்வொன்றும் இந்தியாவை மாற்றியமைக்கும் முயற்சியாகவே உள்ளது. இவற்றை நீங்கள் முழுமையாகப் பார்க்க நேர்ந்தால், அந்த புள்ளிகளை இணைத்துப் பார்த்தால், நமது இளைஞர்களின் எதிர்காலத்தை இந்திய அரசு எப்படிப் பாதுகாக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். கோவிட் தொற்றுநோய் சமயத்தில் குறிப்பிடத்தக்க அளவு பின்னடைவை சந்திக்கும் என்று கணிக்கப்பட்ட ஒரு நாடு, முழு உலகிற்கும் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை வழங்கியது.

நமது சந்திரயான்-3 தரையிறக்கம், ஆதித்யா எல்1 ஆய்வகம், முன்மொழியப்பட்ட ககன்யான் பணி ஆகியவை இந்தியாவுக்கு சக்திவாய்ந்த உத்வேகங்களை அளித்துள்ளது. டிஜிட்டல் சகாப்தத்தில், UPI பரிவர்த்தனைகளின் அளவு, நமது உள்கட்டமைப்பு மற்றும் நமது மனநிலையைப் பற்றி விவரிக்கிறது. 90,000 ஸ்டார்ட்அப்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட யூனிகார்ன்களைக் கொண்ட புதிய இந்தியாவில், ட்ரோன் திதி, அடல் டிங்கரிங் லேப்கள், ஹேக்கத்தான்கள், கிரீன் ஹைட்ரஜன் மிஷன், நானோ உரங்கள் என்று பல்வேறு புதிய முயற்சிகளை நாடு மேற்கொண்டபடி உள்ளது" என்று தெரிவித்தார். விழாவில், ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் இரண்டாம் நாளான நாளை பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். மாநாட்டின் இறுதி நாளான நாளை மறுநாள் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார்.