Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

இந்தியாவுக்கு பின்னடைவு

ஈரான் மீதான போரில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யும் பணியை பாகிஸ்தான் செய்கிறது என்ற தகவல் உலக அரங்கில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவுக்கு இது அதிர்ச்சி. மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் மும்பை தாக்குதலுக்கு பிறகு பல்வேறு ஆதாரங்களுடன் உலக அரங்கில் பாகிஸ்தான் ஒதுக்கி வைக்கப்பட்டது. ஆனால் இன்று? மோடியின் மோசமான வெளியுறவுக்கொள்கையால் பாகிஸ்தான் மீண்டும் தலையெடுப்பதும், உலக அரங்கில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்வதும் நிச்சயமாக இந்தியாவுக்கு ஒரு பின்னடைவு தான்.

பாகிஸ்தான் ஆயுதப் படைகளின் தலைவர் பீல்ட் மார்ஷல் அசிம் முனீர், அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவைப் பெற்றவர். அமெரிக்க வெள்ளை மாளிகையில் அழைத்து அவருக்கு டிரம்ப் விருந்து அளித்துள்ளார். உலக தலைவர்களுக்கு மட்டுமே திறக்கும் வெள்ளை மாளிகை வழக்கத்திற்கு மாறாக பாகிஸ்தானின் ராணுவ தளபதிக்கு திறக்கப்பட்டதும், அங்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு, சிறப்பு விருந்து அளிக்கப்பட்டதும், யாருக்கு அதிர்ச்சி இல்லையோ இந்தியாவுக்கு அதிர்ச்சி. அதை விட முக்கியமாக தனக்கு மிகவும் பிடித்தவர் அசிம் முனீர் என்று தான் டிரம்ப் கூறி வருகிறார்.

இப்போது ஈரான் போர். பாகிஸ்தானுடன் சுமார் 900 கி.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு அண்டை நாடு மட்டுமல்ல, இருநாடுகளும் நெருங்கிய நட்புறவு கொண்டுள்ளன. இதை பயன்படுத்திக்கொண்ட அமெரிக்கா, ஈரான் போரில் மத்தியஸ்தம் செய்யும் வேலையில் பாகிஸ்தானை பயன்படுத்திக்கொண்டுள்ளது. பாகிஸ்தான் இதுவரை ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு தரப்பினருக்கும் இடையில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் வேலையை மட்டுமே செய்து வருகிறது. இப்போது சமரச முயற்சிக்கு களம் இறங்கி உள்ளது. உலக அரங்கில் சரிந்து போன செல்வாக்கை சரி செய்யும் வாய்ப்பாக பாகிஸ்தான் இதை பயன்படுத்தி வருகிறது.

ஆனால் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய தனது இரண்டு அண்டை நாடுகளுடன் மோதலில் ஈடுபட்டுள்ள ஒரு நாடு, தன்னை எவ்வாறு அமைதியைக் கொண்டுவரும் நாடாக நிலைநிறுத்திக் கொண்டது என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கு எப்படி அமெரிக்கா சம்மதித்தது, இது தொடர்ந்தால் உலக அரங்கில் மீண்டும் பாகிஸ்தான் தன்னை வலுப்படுத்திக்கொள்ளும் ஒருவாய்ப்பாக அமைந்து விடாதா என்ற கவலை அனைவருக்கும் எழுந்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவித்து வருகிறது.

மோடி ஆட்சியிலும் கூட எல்லையை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பலியான ராணுவ வீரர்கள், அப்பாவி மக்கள் ஏராளம். பஹல்காம் தாக்குதல் எல்லாவற்றிலும் உச்ச கட்டம். அப்படிப்பட்ட ஒரு நாட்டை இருநாடுகள் இடையிலான சமரச பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு நேரடியாக இந்தியாவுக்கு எதிரான ஒரு நடவடிக்கையாகத்தான் பார்க்க வேண்டிது உள்ளது. ஈரானுடன் பாகிஸ்தானுக்கு உள்ள நட்புறவாக இதை கருதினாலும், உலக அரங்கில் பாகிஸ்தானுக்கு மீண்டும் மதிப்பு அளிக்கும் அம்சமாகத்தான் இந்த நடவடிக்கை மாறி உள்ளது. இந்தியா இனி கவனமாகத்தான் இதை கையாள வேண்டும்.