திருவனந்தபுரம்: கலாமண்டலம் கோபி என்றால் கேரளாவில் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இவருக்கு 86 வயது ஆகிறது. மூத்த கதகளி கலைஞர் பத்மஸ்ரீ, சங்கீத நாடக அகாடமி விருது உள்பட ஏராளமான விருதுகள் கிடைத்துள்ளன. திருச்சூரில் இவர் தன்னுடைய மகன் ரகுவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கலாமண்டலம் கோபியின் மகன் ரகு தன்னுடைய முகநூலில் கூறியிருப்பதாவது:
திருச்சூரில் உள்ள ஒரு பிரபல டாக்டர் ஒருவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். திருச்சூர் தொகுதி பாஜக வேட்பாளர் சுரேஷ்கோபியை என்னுடைய தந்தை ஆசீர்வதிக்க வேண்டும் என்றும், அதற்காக அவர் விரைவில் வீட்டுக்கு வருவார் என்றும் கூறினார். நான் முடியாது என்று அவரிடம் கூறினேன்.
அப்பாவுக்கு பத்மபூஷண் வேண்டாமா என்று அந்த டாக்டர் என்னிடம் கேட்டார். இவ்வாறு ரகு தன்னுடைய முகநூலில் குறிப்பிட்டிருந்தார். அப்படி பத்மபூஷண் தனக்குத் தேவையில்லை என்று தன்னுடைய தந்தை கூறியதாகவும், சுரேஷ்கோபிக்காக மேலும் பல விஐபிகள் தந்தையை சந்திக்க முயற்சிப்பதாகவும் ரகு தன்னுடைய முகநூலில் மேலும் தெரிவித்துள்ளார்.
