Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

துணை ஜனாதிபதி-தமிழக ஆளுநர் டெல்லியில் இன்று சந்திப்பு

புதுடெல்லி: தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டார். இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசு தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அப்படி முடிவு எடுக்காதபட்சத்தில் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாநில அரசுகள் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்திருந்தனர்.

இந்த தீர்ப்பு குறித்து பேசிய ஜெகதீப் தன்கர், ‘நீதிபதிகள் சூப்பர் நாடாளுமன்றமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார். அதோடு, ஜனாதிபதிக்கு நீதிமன்றம் அறிவுறுத்த முடியாது எனவும் தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கு எதிர்க்கட்சிகள் பலவும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் குடியரசு துணை தலைவர் ஜகதீப் தன்கரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லியில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. தன்கருடான சந்திப்பை தொடர்ந்து, ஒன்றிய சட்டத்துறை அதிகாரிகளுடன் கவர்னர் ரவி சந்தித்து ஆலோசனை மேற்கொள்வார் என்று தெரிகிறது. துணை ஜனாதிபதி தன்கர், மேற்கு வங்க மாநில கவர்னராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர், ஜனாதிபதி அதிகாரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஒன்றிய அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படும் நிலையில் இவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.