Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுற்றுச்சூழல் மாற்ற தேசிய செயல் திட்டத்துக்கு நிதி தேவை: ஒன்றிய அமைச்சருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சந்தித்து கோரிக்கை

சென்னை: சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் தேசிய செயல் திட்டத்துக்கு தேவையான நிதியை வழங்க கோரி தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு அரசின் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவை புதுடெல்லியில் சந்தித்தார். அப்போது, பல தமிழ்நாடு திட்டங்களுக்கு அனுமதி மற்றும் நிதி கோரி மனுவை சமர்ப்பித்தார். அமைச்சருடன் தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூவும் சென்றிருந்தார்.

தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கில், 1,50,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட தொழில்துறை கொட்டகைகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அமைச்சகம் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்காக ஒன்றிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்த அதே வேளையில், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) மற்றும் மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழு (SEAC) ஆகியவற்றின் மறுசீரமைப்புக்கான தமிழக அரசின் முன்மொழிவை விரைந்து முடிக்குமாறு நிதியமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக மாநில மற்றும் ஒன்றிய அமைச்சர்களின் கலந்துரையாடலின் போது, ​​தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர மற்றும் வனச் சூழல் அமைப்புகளை மேம்படுத்துவதற்கான பசுமைக் கவசத்தை உருவாக்குவதற்கான திட்டத்திற்கு, சுற்றுச்சூழல் மாற்றம் மற்றும் பசுமை இந்தியா இயக்கம் குறித்த தேசிய செயல்திட்டத்தின் கீழ், ரூ27.53 கோடி செலவில் ஏற்கனவே அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட திட்டத்திற்கு ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத்துறையிடம் கோரப்பட்டது. இத்திட்டம் இயற்கை சார்ந்த தீர்வுகள் மூலம் மாவட்டத்தில் பல கடலோரப் பகுதிகளில் கடல் அரிப்பை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தின் தாங்கல் பகுதியிலிருந்து தேங்குமரஹாடா கிராமத்தை இடமாற்றம் செய்வதற்கான விரிவான திட்டத்தை ரூ74.4 கோடி செலவில் மேற்கண்ட ஒன்றிய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையத்திடம் (CAMPA) தமிழ்நாடு அரசு சமர்ப்பித்துள்ளது.

அந்தப் பகுதியில் புலிகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும், அடிக்கடி ஏற்படும் மனித வனவிலங்கு மோதல்கள் உள்ளூர் சமூகத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பதையும் கருத்தில் கொண்டு, திட்டத்திற்கு விரைந்து அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு மாநிலத்தில் வளர்ந்து வரும் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு விரைவான அனுமதியும், தமிழக அரசின் முன்மொழிவுக்கு விரைந்து அனுமதி வழங்குவதாகவும் ஒன்றிய அமைச்சர் உறுதியளித்துள்ளார். இந்த உரையாடலின் போது, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சக செயலாளர் தன்மய் குமார், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் நரேஷ் பால்கங்வார், வனத்துறை இயக்குனர் ஜெனரல் சுஷில் குமார் அவஸ்தி ஆகியோர் உடனிருந்தனர்.