டெல்லி: 2014-15-ஆம் நிதியாண்டில் ரூ.46,429 கோடியாக இருந்த நாட்டின் பாதுகாப்பு உற்பத்தி, 2025-26-ஆம் நிதியாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ரூ. 1.78 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சக ஆலோசனைக் குழு கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ஆயுத படையில் ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளின் பங்கு அதிகரித்து வருகிறது; எனவே, எதிர்கால சவால்களை எதிர்கொள்ள நமது ஆயுதப்படைகள் தயாராக இருக்க வேண்டும்.
இதனை கருத்தில் கொண்டே ஆண்டுதோறும் ராணுவத்திற்கான பட்ஜெட் போதுமான அளவு ஒதுக்கப்படுவதை உறுதி செய்துள்ளோம். 2026-27 நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த பாதுகாப்பு பட்ஜெட் ரூ. 7.85 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில், நவீனமயமாக்கல் மற்றும் மூலதனக் கொள்முதலுக்காக ரூ. 2.19 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஆயுதப்படைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமின்றி, இந்தியத் தொழில்துறைகளையும் உள்நாட்டு உற்பத்தியையும் ஊக்குவிக்கும்.
பாதுகாப்புத் துறையில் தற்சார்பு நிலையை நோக்கி நாம் அடைந்துள்ள முன்னேற்றம், பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியிலும் பிரதிபலிப்பதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். பாதுகாப்புத் துறை உற்பத்தி முந்தைய ஆண்டை விட 15.6% வளர்ச்சியடைந்துள்ளது. இதில் பொதுத்துறை நிறுவனங்கள் (PSUs) 76% பங்களிப்பையும், தனியார் துறை 24% (சுமார் ₹42,000 கோடி) பங்களிப்பையும் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். வரும் 2029-ஆம் ஆண்டுக்குள் ஆண்டு பாதுகாப்பு உற்பத்தியை ரூ.3 லட்சம் கோடியாகவும், ஏற்றுமதியை ரூ.50,000 கோடியாகவும் உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.


