Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கன்னடத்துக்காக பேசுபவர்கள் செயலில் காட்ட வேண்டும்: கமல்ஹாசனுக்கு நடிகர் சிவராஜ்குமார் ஆதரவு

பெங்களூரு: நடிகர் கமல்ஹாசன் கன்னடம் மீது அதிக அன்பு கொண்டவர் என்றும், கன்னடம் கன்னடம் என்று பேசுபவர்கள் கன்னடத்தின் மீதான பற்றை வெறும் பேச்சில் காட்டாமல் செயலில் காட்ட வேண்டும் என்று நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழிலிருந்துதான் கன்னட மொழி தோன்றியது என சமீபத்தில் கமல்ஹாசன் பேசினார். இதனால் கமலுக்கு எதிராக கர்நாடக முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள், பாஜ, கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கன்னடம் பற்றி கமல் பேசும்போது, அந்த நிகழ்ச்சியில் சிவராஜ்குமாரும் பங்கேற்று இருந்தார். கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கன்னட அமைப்புகள் கோரிய நிலையில், அன்பு மன்னிப்பு கேட்காது என கமல் திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.

இதுதொடர்பாக நேற்று பேசியுள்ள நடிகர் சிவராஜ்குமார், ‘‘எனக்கு கமல்ஹாசனை மிகவும் பிடிக்கும். என் தந்தைக்கும் கமல்ஹாசனுக்கும் சிறப்பான உறவு இருந்தது. நான் கமல்ஹாசனின் வெறும் ரசிகர் மட்டுமல்ல. நான் அவரை மிகவும் போற்றுகிறேன். கமல்ஹாசன் தான் எனது உத்வேகம். அவரை எனது முன்னோடியாக போற்றுகிறேன். கமல்ஹாசன் கன்னடத்தின் மீது அதிக அன்பும் பற்றும் கொண்டவர். அவர் பெங்களூருவிற்கு வந்தபோதே அவரிடமே கேட்டிருக்கலாம். இப்போது ஏன் அதை பெரிய பிரச்னையாக்குகிறீர்கள்? கன்னடம்.. கன்னடம்.. என்று வெறும் வார்த்தையில் பேசினால் மட்டும் போதாது. செயலில் காட்ட வேண்டும். நான் கன்னடத்திற்காக போராடுவேன்.

கன்னடத்திற்காக நான் சாகவும் தயார். உண்மையாகவே கன்னடத்திற்கு ஆதரவாக இருப்பவர்கள் என்றால், பெரிய நடிகர்களுக்கு மட்டும் ஆதரவளிக்காமல், பெரிய நடிகர்களின் திரைப்படங்களைப் பற்றி மட்டும் பேசாமல், புதிதாக அறிமுகமாகும் இளம் நடிகர்களுக்கும் ஆதரவு கொடுக்க வேண்டும். ஊடகங்கள் இதுபோன்ற மொழி விவகாரங்களில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். கமல்ஹாசனுக்கு அவர் என்ன பேசினார் என்று நன்றாக தெரியும். அவரே உரிய விளக்கம் கொடுப்பார்’’ என்று தெரிவித்தார்.

கமலுக்கு கெடு

கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக் கூட்டம் நேற்று நடந்தது. ஜூன் 5ம் தேதி தக் லைப் திரைப்படம் ரிலீசாக உள்ள நிலையில், இவ்விவகாரம் குறித்து அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, மே 30ம் தேதிக்குள் (இன்று) கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தக் லைப் திரைப்படம் கர்நாடகாவில் ரிலீஸ் செய்யப்படாது என்று முடிவு செய்யப்பட்டது. அந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் நரசிம்மலு, கமல்ஹாசனின் தக் லைப் திரைப்படத்தை கர்நாடகாவில் தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு கன்னட அமைப்புகள் வலியுறுத்துகின்றன. எனவே தான் இந்த கூட்டம் கூட்டப்பட்டு, அதுதொடர்பாக விவாதிக்கப்பட்டது. கமல்ஹாசன் அவரது பேச்சுக்காக கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக கமல்ஹாசனை தொடர்புகொண்டு பேச முயற்சிக்கிறோம். கமல்ஹாசன் மீது கருணை காட்ட முடியாது.