திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டாவை சேர்ந்தவர் மேகா(24). இவர் மத்திய உளவுத்துறையான ஐபியில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். கடந்த வருடம் முதல் இவர் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் குடியுரிமை வழங்கல் பிரிவில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இவர் இரவுப் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பினார். இந்நிலையில் நேற்று காலை விமானநிலையம் அருகே உள்ள சாக்கை என்ற இடத்தில் ரயில்வே தண்டவாளத்தில் மேகா ரயில் மோதி இறந்த நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து அறிந்ததும் திருவனந்தபுரம் பேட்டை போலீசார் விரைந்து சென்று அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், மேகா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய உளவுத்துறை பெண் அதிகாரி ரயில் மோதி இறந்த நிலையில் காணப்பட்டது திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
