Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

ஞாயிற்றுக்கிழமையான நேற்று பக்தர்கள் திரண்டனர் காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் 5 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

*பார்க்கிங் நிரம்பி வாகனங்கள் அணிவகுத்து நின்றன

சித்தூர் : சித்தூரில் பிரசித்தி பெற்ற காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் 5 மணிநேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று காணிப்பாக்கம் சுயம்பு வரசித்தி விநாயகர் கோயில். கனி என்ற சொல் ஒரு ஈர நிலத்தை குறிக்கும், மேலும் பாக்கம் என்பது அதன் வழியாக நீர் ஓட்டத்தை குறிக்கிறது. கோயிலுக்கு அருகில் புனிதமான பஹூதா நதி பாய்கிறது.

இது இந்த ஸ்தலத்தின் பாரம்பரியத்தை வளப்படுத்துகிறது. குறிப்பிடத்தக்க வகையில், சுயம்பு விநாயகர் சிலை கோயிலின் கிணற்றில் உள்ளது. மேலும் அது படிப்படியாக வளர்ந்து வருவதாக நம்பப்படுகிறது. இந்த புனிதமான கிணற்றில் இருந்து வரும் நீர் பக்தர்களுக்கு தீர்த்தமாக வழங்கப்படுகிறது.

இக்கோயிலுக்கு சித்தூர் மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து அவர்கள் வேண்டுதலுக்கு ஏற்ப கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்தி செல்கின்றனர். இதனால் வரசித்தி விநாயகர் கோயிலில் எப்போதுமே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று வழக்கத்தை விட காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்களும், காணிப்பாக்கம் விநாயகர் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

இதனையொட்டி காலை முதலே கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் 5 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும், தரிசன வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு மோர், குடிநீர் உள்ளிட்டவை தடையின்றி வழங்கப்பட்டது.

தொடர்ந்து, கோயில் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், பக்தர்களின் வருகை அதிகரித்ததால் கோயில் பார்க்கிங் முழுவதும் நிரம்பி சாலையோரங்களில் வாகனங்கள் அணிவகுத்தபடி நின்றன. இதனால் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட கடைகளில் விற்பனை களைகட்டி வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஸ்ரீகாளஹஸ்தியில் 7 ஆயிரம் பேர் ராகு- கேது தோஷ நிவர்த்தி பூஜை

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் தினமும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வாயுத்தலமான இக்கோயிலில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இங்கு தோஷங்களை போக்கி, நல்வாழ்வு அருளும் தலமாக இக்கோயில் உள்ளது. இதனால் தினந்தோறும் 500க்கும் மேற்பட்டோர் ராகு கேது பூஜையில் பங்கேற்று தங்களது தோஷ பூஜைகளை நிவர்த்தி செய்கின்றனர்.

இந்த பூஜைக்கு கட்டணமாக ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. தினமும் 5 காத்திருப்பு அறைகள் நிரம்பி பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி விடுமுறை தினமான நேற்று சுமார் 2 மணிநேரம் காத்திருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் சுமார் 7 ஆயிரம் ராகு- கேது தோஷ நிவர்த்தி பூஜையில் பங்கேற்றனர்.