Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கு புதுச்சேரி அரசுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்: உச்சநீதிமன்றம் அதிரடி

புதுச்சேரி: பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்க தவறியதாக உச்சநீதிமன்றம் புதுச்சேரி அரசுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்கான விரிவான வழிமுறைகளை கடந்த 2024 டிசம்பர் 3ம் தேதி நீதிமன்றம் வழங்கியது. இதுதொடர்பான வழக்கு கடந்த பிப்ரவரி 11ம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது நாகாலாந்து, கோவா, பீகார், ராஜஸ்தான், உத்தரகாண்ட், ஒடிசா, மிசோரம், கர்நாடகா, திரிபுரா, குஜராத், உத்தரப்பிரதேசம், அசாம், அரியானா, தமிழ்நாடு, மேகாலயா, பஞ்சாப், சிக்கிம், ஆந்திரா, கேரளா மற்றும் யூனியன் பிரதேசங்களான சண்டிகர், அந்தமான்- நிக்கோபர் ஆகிய மாநிலங்கள் இணக்க பிரமாண பத்திரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதே நேரத்தில் மணிப்பூர், ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசம், தெலங்கானா, புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் வழக்கறிஞர்கள் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய மேலும் காலஅவகாசம் வழங்க வேண்டுமென நீதிபதிகள் பி.வி நாகரத்னா மற்றும் சதீஷ் சந்திரா ஷர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு கோரிக்கை வைத்தனர்.

ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்யாத மாநிலங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் பிரமாண பத்திரங்களை 3 வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அபராதத்தொகையை 2 வாரத்துக்குள் உச்சநீதிமன்றத்தின் சட்டப்பணிகள் குழுவிடம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். இந்த வழக்கு மார்ச் 25ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.