தாவணகெரே: அறிவியல்பூர்வமற்ற முறையில் கட்டப்படும் பாலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாவணகெரே மாவட்டம், ஹலேகுந்தவாடா அருகே தேசிய நெடுஞ்சாலைக்காக கட்டப்பட்டு வரும் பாலம் அறிவியல்பூர்வமற்றது எனக் கூறி, வாகனப் போக்குவரத்து மற்றும் பணியை மறித்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, நெடுஞ்சாலைக்காக கட்டப்பட்டு வரும் பாலம் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் கிராம மக்கள் திரண்டனர்.
பின்னர், வாகன போக்குவரத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு, நடந்து வரும் பாலப் பணியை நிறுத்த வேண்டும் என கோஷமிட்டனர். தகவலறிந்து துணைகோட்ட அலுவலர் சந்தோஷ், தாசில்தார் அஸ்வத் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். அப்போது, தேசிய நெடுஞ்சாலையில், (என்எச் 48) பழைய குந்தவாடா கிராமத்துக்கு அருகில் செல்கிறது. 6 வழிச்சாலைக்காக புதிய மேம்பாலம் கட்டப்படுகிறது. ஆனால் இங்கு, பன்னிகோடு மற்றும் ஹலேகுந்தவாடாவை இணைக்கும் சாலையை இணைக்கவில்லை.
புதிதாக கட்டப்பட்ட பாலத்தால் கிராமத்துக்கு எந்த பயனும் இல்லை. முன்பு கட்டப்பட்ட பாலமும் அறிவியல்பூர்வமற்றது. இதனால் பல கிராமங்களை இணைக்கும் சாலைகள் பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளது. பள்ளி மாணவர்களும் சிரமப்பட்டனர். புதிய பாலம் கட்டும்போது பழுதை சரி செய்து தரப்படும் என நெடுஞ்சாலை ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆனால், கிராம மக்களின் பரிந்துரைகளை கருத்தில் கொள்ளாமல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என சரமாரியாக குற்றம்சாட்டினர். பின்னர் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட துறையினரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில ஈடுபட்ட கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.


