Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது ஏன்?உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: கடந்த 2016- 2021 ஆண்டு அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர், அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் ஆவின் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மொத்தம் 33 பேரிடம் ரூ.3 கோடியை, விருதுநகர் அதிமுக பிரமுகரான விஜய நல்லதம்பி என்பவர் மூலமாக பணம் வசூலிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன், ராஜேந்திர பாலாஜி தொடர்பான விவகாரத்தில் அனைத்துக் கட்ட விசாரணைகளும் முடிவடைந்து விட்டது.

குற்றப்பத்திரிக்கை மட்டும் தான் தாக்கல் செய்ய வேண்டும். அதுவும் தற்போது தயாராக உள்ளது. இருப்பினும் எங்களது தரப்பு வாதங்களை புரிந்து கொள்ளாமல் சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ராஜேந்திர பாலாஜி தொடர்பான வழக்கை முன்னதாக விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அப்படி இருக்கும் போது வழக்கை ஏன் உயர்நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஏதோ ஒன்று நடந்துள்ளது. அதனை நாங்கள் தெளிவாக அறிந்துக்கொள்ள வேண்டும். மேலும் மனுதாரர் இந்த மேல்முறையீட்டு மனுவின் நகலை தமிழ்நாடு அரசுக்கு அளிக்க வேண்டும். இதுகுறித்து அவர்களிடம் இருந்து ஒரு சில விளக்கத்தை நாங்கள் பெற வேண்டியுள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.