புதுடெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இது தொடர்பாக அந்த கட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பஹல்காம் தாக்குதல் குறித்த விவரங்களை சர்வதேச சமூகத்திடம் வழங்க வேண்டும். இந்த தீவிரவாத தாக்குதல் பாதுகாப்பு குறைபாட்டின் விளைவாகும். இது குறித்து விசாரிக்கப்பட்டு தகுந்த பொறுப்பு கூறல் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
சமூக ஊடகங்களில் முஸ்லிம்கள் மற்றும் காஷ்மீரிகளை குறிவைத்து வெறுப்பு பிரசாரம் மற்றும் தனிநபர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து அரசியல் தலைமைக்குழு கண்டனம் தெரிவிக்கிறது. அரசாங்கம் எடுத்துள்ள ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு ஒப்புக்கொண்டாலும் , தாக்குதலுக்கு காரணமானவர்களை அடையாளம் காணும் முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என கூறப்பட்டுள்ளது.


