Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த மவுலானா இக்பால் தீவிரவாதியா?; ஜம்மு காவல்துறை விளக்கம்

ஜம்மு: பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த மவுலானா இக்பால் தீவிரவாதி கிடையாது என ஜம்மு காஷ்மீர் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடியாக பாகிஸ்தான் நேற்று எல்லை தாண்டிய தாக்குதல் நடத்தியது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 5 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 13 இந்தியர்கள் உயிரிழந்தனர். அவர்களில் மண்டி தாலுகா பைலா கிராமத்தில் வசித்து வந்த மவுலானா இக்பால் என்பவரும் ஒருவர். ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் தீவிரவாதி மவுலானா இக்பால் கொல்லப்பட்டதாக சில ஊடகங்கள், சமூக ஊடகங்களில் செய்திகள் வௌியாகின.

இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை, “பூஞ்ச் நகரில் உயிரிழந்த மவுலானா இக்பால் தீவிரவாதி அல்ல. அவர் உள்ளூர் மக்களால் மதிக்கப்படும் ஒரு மதத்தலைவர். அவருக்கு எந்தவொரு தீவிரவாத அமைப்புடனும் தொடர்பில்லை. இதுபோன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்களில் தவறான தகவல்களை பரப்புவது பீதியை ஏற்படுத்துவதுடன், இறந்தவரின் கண்ணியத்தையும், துயரத்தில் உள்ள அவரது குடும்பத்தினரின் உணர்வுகளையும் அவமதிக்கிறது. இதுபோன்ற போலி செய்திகளை வௌியிடும் எந்தவொரு ஊடகம், சமூக வலைதளம் அல்லது தனி நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளது.