மகாராஷ்டிரா கண்காட்சியில் முதல் பரிசுபெற்றதால் மவுசு ரூ.1 கோடிக்கு விலை பேசியும் குதிரையை தர மறுத்த விவசாயி
மோகனூர்: மகாராஷ்டிராவில் நடந்த கண்காட்சியில், மோகனூர் குதிரையை ரூ.1 கோடிக்கு விலைக்கு கேட்டும் குதிரையை வளர்த்தவர் விற்க மறுத்துள்ளார். நாமக்கல் மாவட்டம், மோகனூரை அடுத்த எம்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் வீரா வரதராஜன்(43). விவசாயியான இவர் குதிரை வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். நாய், குதிரை கண்காட்சி எந்த மாநிலத்தில் நடந்தாலும், அங்கு சென்று விடுவார். அவ்வாறு சென்னையில் நடைபெற்ற ஒரு கண்காட்சிக்கு சென்ற வரதராஜன், அங்கு 5 வயதுள்ள மார்வாடி ஆண் குதிரையை ஆர்வத்துடன் வாங்கி வந்தார். தினமும் குதிரைக்கு சத்தான உணவு மற்றும் பல்வேறு பயிற்சிகள் அளித்து வந்துள்ளார்.
தற்போது இந்த குதிரை நல்ல உயரத்துடன், கம்பீரமாக உள்ளது. இதனால், இந்த குதிரையை பல்வேறு மாநிலங்களில் நடக்கும் கண்காட்சிக்கு பங்கேற்க அழைத்து சென்று வருகிறார். சில தினங்களுக்கு முன், மகாராஷ்டிராவில் நடைபெற்ற குதிரை கண்காட்சியில், இவர் வளர்த்து வரும் மார்வாடி குதிரை பங்கேற்று முதல் பரிசு பெற்றது. இந்த குதிரையின் அழகை பார்த்து மகாராஷ்டிராவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் செல்பி எடுத்தனர். இது அச்சமயத்தில் வைரல் ஆனது. இதனையடுத்து இந்த குதிரையை ரூ.1 கோடிக்கு கேட்டும் கொடுக்க வரதராஜன் மறுத்து விட்டார்.
இது குறித்து வீரா வரதராஜன் கூறுகையில், ‘குதிரை வளர்ப்பில் அதிக ஆர்வம் உள்ளதால், குதிரையை பல வருடமாக வளர்த்து வருகிறேன். இப்போது வைத்துள்ள குதிரை மகாராஷ்டிராவில் நடைபெற்ற கண்காட்சியில் பங்கேற்று காது, கழுத்து, உடல் அழகு, கால் அழகில் முதல் பரிசு பெற்றது. இதனை பார்த்து அம்பானி குரூப் நிர்வாகத்தினர் ரூ.1 கோடிக்கு கேட்டனர். ஆனால், ஆசையாக வளர்த்த குதிரையை விற்க மனமில்லாததால், அவர்களுக்கு தரவில்லை,’ என்றார்.


