Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஓட்டலுக்குள் காரை ஓட்டி சென்ற விவகாரம்: மதுரை வக்கீலின் 7 ஆண்டு இடைநீக்கத்தை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்

புதுடெல்லி: ஓட்டலுக்குள் காரை ஓட்டி சென்ற விவகாரத்தில் மதுரை வக்கீலின் 7 ஆண்டு இடைநீக்கத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. மதுரையில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கின் புகார்தாரருக்கு சொந்தமான ஓட்டலுக்குள் அவரது காரை ஓட்டி சென்று பாதிப்பை ஏற்படுத்தி உள்ளார். இந்த விவகாரம் குறித்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்த பார் கவுன்சில் ஆப் இந்தியா, சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கு முதலில் ஓராண்டு காலம் இடைநீக்கம் விதித்த நிலையில், பின்னர் அதனை ஏழு ஆண்டாக மாற்றி உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ‘பார் கவுன்சில் ஆப் இந்தியா எடுத்த நடவடிக்கைக்கு எதிராக எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது’ என்று திட்டவட்டமாக தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுகு எதிராக சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘வழக்கறிஞர் விவகாரத்தில் பார் கவுன்சில் ஆப் இந்தியா எடுத்த நடவடிக்கை சரியானதே; இந்த சம்பவத்தில் உங்களது நடத்தையை பாருங்கள். வழக்கறிஞராக இருக்கும் நீங்கள், புகார்தாரரின் ஓட்டல் மீது காரை ஓட்டி ஆபத்தை ஏற்படுத்தி உள்ளீர்கள். வழக்கறிஞர்கள் எனபவர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் முன்னதாக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் நாங்கள் தலையிட்டு எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை’ என்று தெரிவித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.