Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

எல்டிவி விசா பரிசீலனையில் உள்ள நிலையில் புதுவையில் இருந்து வெளியேற பாகிஸ்தான் பெண் மறுப்பு: முதல்வர் உதவி செய்ய கோரிக்கை

புதுச்சேரி: எல்டிவி விசா பரிசீலனையில் உள்ள நிலையில் புதுவையில் வசிக்கும் பாகிஸ்தான் பெண் இந்தியாவை விட்டு வெளியேற மறுப்பு தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பவ்சியாபானு (39). இவர் புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து, லாஸ்பேட்டையில் வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக பவ்சியாபானுவை நாட்டைவிட்டு வெளியேறக்கூறி, தூதரக அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.

இந்நிலையில், அவர் புதுச்சேரியை விட்டு வெளியேறாததால் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து அவரது கணவர் ஹனிப்கான் கூறுகையில், ‘புதுச்சேரி காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் முரண்பாடு இருக்கிறது. என்னுடைய மனைவி பவ்சியாபானு விசாவுக்கு 2023 முதல் வெளிநாட்டினர் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தோம். ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தோம். ஆனால் இதனை யாரும் கவனிக்கவில்லை. எட்டு முறைக்கு மேல் விண்ணப்பித்துவிட்டேன். இப்போது வெளியேற சொல்கிறார்கள்.

நீண்டகால விசா (எல்டிவி), டிப்ளமேட்டிக் விசா வைத்திருப்பவர்களுக்கு இது பொருந்தாது. இதுபோன்ற சூழலில் எல்டிவி விசா, விண்ணப்பம் இன்னமும் பரிசீலனையில் உள்ளது. தற்போது கமிஷனர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி வந்தது. நாளைக்குள் (இன்று) எனது மனைவி விசா பரிசீலிக்கப்படும் என கூறியுள்ளனர். விசா நடைமுறைகளை விரைவாக முடிக்க உதவுமாறு முதல்வருக்கு கோரிக்கை விடுக்கிறேன்.

கடந்த 2012ல் எனக்கு திருமணம் நடந்தது. பாகிஸ்தானுக்கு சென்று எனது தாய் மாமன் மகளை திருமணம் செய்தேன். என்னுடைய மாமனார், மாமியார் ஆகியோர் பூர்வீகம் சென்னைதான். வேலை விஷயமாக பாகிஸ்தான் சென்று அங்கே தங்கிவிட்டனர். இதுபோன்ற சூழலில் பாகிஸ்தானில் எனக்கு திருமணம் நடந்தது. எங்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.

எல்லோரும் ஒன்றாக வாழ்ந்து வரும் சூழலில், எனது மனைவி மட்டும் பாகிஸ்தானுக்கு எப்படி செல்ல முடியும். எனது இரு பிள்ளைகளும் புதுச்சேரியில் தான் பிறந்து வளர்ந்து வருகின்றனர். எனவே என்னுடைய மனைவி பவ்சியாபானுவுக்கு இந்திய குடியுரிமை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்றார். இதுகுறித்து, பவ்சியாபானு கூறுகையில், ‘நான் எனது குழந்தைகள், கணவருடன் புதுச்சேரியில் வசித்து வருகிறேன். எனவே முதல்வர் ரங்கசாமி இவ்விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.