திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ். இவர் குமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். களியக்காவிளையை சேர்ந்த கிரீஷ்மா என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து ஷாரோன் ராஜ் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் உயிரிழந்தார்.
தனது மகனை அவரது காதலி கிரீஷ்மா தான் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார் என்று ஷாரோன் ராஜின் பெற்றோர் பாறசாலை போலீசில் புகார் செய்தனர். குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், ஷாரோன் ராஜுக்கு காதலி கிரீஷ்மா கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்தது தெரியவந்தது. நெல்லையைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரரை கரம் பிடிப்பதற்காக கிரீஷ்மா ஷாரோன் ராஜை தன்னுடைய வீட்டுக்கு வரவழைத்து கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்தது உறுதியானது.
இதையடுத்து கிரீஷ்மா, உடந்தையாக இருந்த அவரது தாய் சிந்து மற்றும் மாமா நிர்மலகுமாரன் நாயர் ஆகியோரை போலீசார் கைது செய்து திருவனந்தபுரம் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின்கரை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 3 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், நீதிபதி பஷீர் நேற்று முன்தினம் கிரீஷ்மா மற்றும் அவரது தாய் மாமா நிர்மல குமாரன் நாயர் ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். இவர்களுக்கான தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி தாய் சிந்துவை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை கிரீஷ்மா மற்றும் நிர்மல குமாரன் நாயர் ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நேற்று இறுதி வாதம் நடைபெற்றது. அப்போது கிரீஷ்மா தரப்பில் கூறுகையில், எனக்கு 24 வயதுதான் ஆகிறது. எம்ஏ இலக்கியத்தில் உயர்ந்த மதிப்பெண்ணுடன் வெற்றி பெற்றுள்ளேன். பெற்றோருக்கு நான் ஒரே மகள். எனவே தண்டனையில் தளர்வுகள் ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், ஒரு வாலிபரின் எதிர்காலத்தை திட்டமிட்டு நிர்மூலமாக்கிய கிரீஷ்மாவுக்கு அதிக பட்ட தண்டனை வழங்க வேண்டும் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பஷீர் 20ம்தேதி (நாளை) தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.



