Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கொல்கத்தா பெண் டாக்டர் கொலை விவகாரம் சடலம் கிடந்த அறையில் கூட்டம் கூடி தடயங்கள் அழிக்கப்பட்டதா? கொல்கத்தா போலீஸ் ஆதாரத்துடன் மறுப்பு

கொல்கத்தா: கொல்கத்தா பெண் டாக்டர் கொல்லப்பட்டு சடலமாக கிடந்த அறையில் வெளிநபர்கள் பலர் கூட்டமாக கூடி தடயங்கள் அழிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை போலீசார் ஆதாரங்களுடன் மறுத்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 9ம் தேதி பெண் பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த வழக்கை முதலில் விசாரித்த மேற்கு வங்க அரசு மூடி மறைக்க முயற்சித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதுதொடர்பாக பாஜ ஐடி பிரிவு தலைவரும் மேற்கு வங்க பொறுப்பாளருமான அமித் மால்வியா கடந்த திங்கட்கிழமை சமூக ஊடகத்தில் 2 வீடியோக்களை பகிர்ந்திருந்தார். அதில், பெண் டாக்டர் சடலம் கிடந்த கருத்தரங்கு அறையில் பலர் கூட்டமாக கூடி இருப்பது காட்டப்பட்டிருந்தது. அந்த கூட்டத்தில், வழக்கில் சந்தேகிக்கப்படும் ஆர்.ஜி.கர் மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் ஆதரவாளர்கள் இருந்ததாகவும் அவர்கள் மூலமாக தடயங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

எனவே இந்த வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகளை கொல்கத்தா போலீஸ் மறுத்துள்ளது. இது தொடர்பாக 2 புகைப்படங்களையும் ஆதாரமாக வெளியிட்டுள்ளது. போலீசார் அளித்த விளக்கத்தில், ‘‘தகவல் கிடைத்ததும் காலை 10.30 மணிக்கு தலா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சடலம் கிடந்த அறையின் நுழைவாயிலை சுற்றிவளைத்து வெளியாட்கள் யாரும் நுழையாமல் இருப்பதை உறுதி செய்தனர். இதன் மூலம் எந்த தடயமும் அழிக்கப்படவில்லை. சடலம் கிடந்த அறையில் முழு விசாரணையும் மாலை 4.20 முதல் 4.40 மணிக்குள் முடிவடைந்தது. கூட்டம் கூடியதாக வெளியான வீடியோ மாலை 4.40 மணிக்கு பிறகு எடுக்கப்பட்டதாகும். வழக்கில் சம்மந்தப்படாத ஒருவர் கூட அறையில் இருக்கவில்லை’’ என கூறி உள்ளனர்.

* போராட்ட பகுதியில் நுழைந்தவர் கைது

கொல்கத்தா பெண் டாக்டர் கொலையில் நீதி கேட்டு, ஆர்.ஜி.கர் மருத்துவமனை அருகே சிந்தி கிராசிங் பிடி சாலையில் ரவீந்திர பாரதி பல்கலைக்கழக மாணவர்கள் இரவு விழிப்புணர்வு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதிகாலை 2 மணி அளவில் சிந்தி காவல் நிலையத்தில் போலீசாருக்கு உதவும் தன்னார்வலர் ஒருவர் தடுப்புகளை தாண்டி போராட்ட பகுதியில் பைக்கில் சென்றார். அங்கு ஒரு மாணவர் மீது பைக் மோதியது. பைக்கில் வந்த தன்னார்வலர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து தப்பி ஓடிய தன்னார்வலர் கைது செய்யப்பட்டார்.