ஸ்ரீகாளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நிர்வாணமாக வந்த பெண் அகோரியை காவலர்கள் தடுத்தனர். இதனால் அந்த பெண் அகோரி பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியில் உளள சிவன் கோயிலுக்கு நேற்று சுவாமி தரிசனம் செய்வதற்காக பெண் அகோரி நாகசாது நிர்வாணமாக வந்தார். அப்போது தேவஸ்தானத்திற்குள் ஆடை அணியாமல் வந்த பெண் அகோரியை கோயில் காவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் மனமுடைந்த அந்த அகோரி காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் திடீரென தான் வந்த காரில் வைத்திருந்த பெட்ரோலை கார் மீதும் தன் மீதும் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பக்தர்களும் கோயில் ஊழியர்களும் தண்ணீர் ஊற்றி தடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் கோயிலின் இரண்டாவது கோபுரம் அருகில் நடந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அகோரியை அமைதியாகும் படியும் அங்கிருந்து செல்ல வேண்டும் என்றும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அந்த பெண் அகோரி கேட்கவில்லை. எனவே கோயிலுக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் மூலம் பெண் அகோரியை அழைத்துச் சென்றனர்.
