Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

3 ஆண்டு வக்கீலாக பணியாற்றிய பிறகே நீதிபதி பணியில் சேரமுடியும்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: நீதிபதி பணியில் சேர குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றியிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 2002ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் குறைந்தபட்ச பயிற்சித் தேவையை நீக்கி, புதிய சட்டப் பட்டதாரிகள் முன்சிப்-மாஜிஸ்திரேட் பதவிகளுக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்கி இருந்தது. இதையடுத்து பின்னர் வழக்கறிஞர்கள் மட்டுமே என்ற நிபந்தனையை மீண்டும் நிலைநாட்டக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பல விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் குறைந்தபட்ச பயிற்சித் தேவையை மீண்டும் நிலைநாட்டும் நடவடிக்கையை பல உயர் நீதிமன்றங்களும் ஆதரிப்பதாக தெரிவித்திருந்தது. அதாவது வழக்கறிஞராக எந்த நடைமுறை அனுபவமும் இல்லாமல் புதிய சட்டப் பட்டதாரிகள் நீதித்துறையில் நுழைய அனுமதிப்பது குறித்து உயர்நீதிமன்றங்கள் கவலையும் தெரிவித்திருந்தது.

இதையடுத்து நீதித்துறை சேவையில் தொடக்க நிலை பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி நிபந்தனையாக குறைந்தபட்ச பயிற்சித் தேவையை மீண்டும் நிலைநிறுத்த வேண்டுமா என்ற கோணத்தில் வழக்கை விரிவாக விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், வாதங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஜனவரி 28ம் தேதி ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் மற்றும் கே.வினோத் சந்திரன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், ‘‘புதிய சட்டப் பட்டதாரிகளை நீதித்துறையில் நீதிபதி பதவியில் சேர அனுமதிப்பது என்பது பிரச்சனைகளுக்கு வழிவகுத்துள்ளது. எனவே நீதித்துறை வேலையில் தொடக்க நிலை பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஒரு நபர் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

இதில் பயிற்சி காலத்தை வழக்கறிஞராக தற்காலிக பதிவு செய்த நாளில் இருந்து கணக்கிடலாம். இந்த உத்தரவு என்பது உயர்நீதிமன்றங்களால் முன்னதாக தொடங்கப்பட்ட ஆட்சேர்ப்பு செயல்முறைக்கு பொருந்தாது. வரும்கால ஆட்சேர்க்கைக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாகும். இதுநாள் வரையில் இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த நிலையில், தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே முன்னதாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அனைத்து ஆட்சேர்ப்பு செயல்முறைகளையும் தற்போது தொடங்கலாம். அதற்கு எந்தவித தடையும் கிடையாது என்று தீர்ப்பளித்த நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.