Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இந்தியா -பாக். இடையே சமரசம் செய்து வைக்க அதிபர் டிரம்பிடம் கேட்டது யார்?ராகுல் காந்தி கேள்வி

புதுடெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான விவகாரத்தில் சமரசம் செய்து வைக்குமாறு அதிபர் டிரம்பிடம் கேட்டது யார் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி இருக்கிறார். ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மற்றும் அதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றம் குறித்து பதிலளிக்கும் வீடியோ பதிவை மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தனது சமூக வலைதள பக்கத்தில் இணைத்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அமைச்சர் ஜேஜே விளக்குவாரா: பாகிஸ்தானை கண்டிப்பதில் ஒரு நாடு கூட இந்தியாவை ஆதரிக்காதது ஏன்? இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சமரசம் செய்ய டிரம்பிடம் யார் கேட்டார்கள்? இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வீழ்ச்சி அடைந்துவிட்டது.

மோடி ஜீ வெற்றுப்பேச்சுக்களை நிறுத்துங்கள். பதில் கூறுங்கள். தீவிரவாதம் குறித்த பாகிஸ்தானின் அறிக்கையை நீங்கள் நம்பியது ஏன்? டிரம்பிற்கு தலைவணங்கி இந்தியாவின் நலன்களை ஏன் தியாகம் செய்தீர்கள்? கேமராக்கள் முன் மட்டும் உங்கள் ரத்தம் கொதிப்பது ஏன்? நீங்கள் இந்தியாவின் கவுரவத்துடன் சமரசம் செய்து கொண்டீர்கள் என்று பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் வெளியுறவு துறை அமைச்சரை ஜெய்சந்த் ஜெய்சங்கர் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனையே ராகுல் ஜேஜே என்று குறிப்பிட்டுள்ளார்.

* குறைத்து மதிப்பிடக்கூடாது -பாஜ

பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, ராகுல்காந்தி, நீங்கள் எந்தப் பக்கம் இருக்கிறீர்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். நீங்கள் இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவரா அல்லது பாகிஸ்தானின் நிஷான் இ பாகிஸ்தானா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நமது துணிச்சலான ஆயுதப்படைகளின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதை நிறுத்துங்கள். கேட்கக்கூடாத கேள்விகளை கேட்பதை நிறுத்துங்கள். அவை தேசிய பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துகின்றன. ராகுலின் கருத்துக்களை சிறார் நடவடிக்கை என்று நிராகரிக்க முடியாது. இந்தியாவிற்கு விரோதமாக நாடுகளின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து செல்வது தான் ராகுல்காந்தியின் குணம் என்றார்.