Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வீட்டு மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்த்த ஒன்றிய அரசு அதிகாரி கைது: கலால் துறை நடவடிக்கை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் வீட்டு மொட்டை மாடியில் ரகசியமாக கஞ்சா செடி வளர்த்த ஒன்றிய தணிக்கைத் துறை அலுவலக உயரதிகாரி கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் கமலேஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக கலால் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கலால் துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் ஒன்றிய கணக்கு தணிக்கைத் துறை அலுவலகத்தில் பணிபுரியும் 3 அதிகாரிகள் வாடகைக்கு வசித்து வரும் ஒரு வீட்டில் திடீரென சோதனை நடத்தினர்.

வீட்டுக்குள் எதுவும் சிக்கவில்லை. ஆனால் அந்த வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று பார்த்தபோது அங்குள்ள ஒரு தொட்டியில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா செடியை கைப்பற்றிய அதிகாரிகள் அந்த வீட்டில் வசித்து வந்த கணக்கு தணிக்கைத் துறை அதிகாரிகள் 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். அதில் அங்கு தங்கியிருந்த ஒன்றிய உதவி கணக்கு தணிக்கை அதிகாரியான ஜிதின் என்பவர் தான் கஞ்சா செடியை வளர்த்தார் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கலால்துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஒன்றிய அரசு உயரதிகாரியின் வீட்டிலேயே கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வந்தது திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.