Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமலுக்கே வராத பொது சிவில் சட்டத்தில் பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்: லிவ் இன் ஜோடி வழக்கால் உத்தரகாண்ட்டில் அதிர்ச்சி

நைனிடால்: உத்தரகாண்ட் மாநிலத்தில் 26 வயதுடைய இந்து பெண்ணும், 21 வயதுடைய முஸ்லிம் ஆணும் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இருவரும் மேஜர் என்பதால் லிவ் இன் உறவில் இருப்பதாகவும் வெவ்வேறு மதத்தை காரணம் காட்டி குடும்பத்தினர் அச்சுறுத்துவதால் பாதுகாப்பு கேட்டும் மனு செய்திருந்தனர். இந்த மனு நீதிபதிகள் மனோஜ் குமார் திவாரி, பங்கஜ் புரோகித் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘உத்தரகாண்ட் பொது சிவில் சட்டம் 378(1) பிரிவின்படி, லிவ் இன் உறவில் இருப்பவர்கள் தங்கள் விவரங்களை பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். அத்தகைய உறவின் தொடக்கத்திலிருந்து ஒரு மாதத்திற்குள் பதிவு செய்யத் தவறினால், அவர்கள் அபராதத்திற்கு உட்படுத்தப்படுவார்கள்’’ என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், லிவ் இன் ஜோடி 48 மணி நேரத்திற்குள் பொது சிவில் சட்டத்தின் கீழ் பதிவு செய்தால் அவர்களுக்கு 6 வாரத்திற்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். ஆனால், உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்னும் அமலுக்கே வராத இந்த நடைமுறையின் கீழ் 48 மணி நேரத்தில் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது பெரும் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.

உத்தரகாண்ட்டில் அமலுக்கு வந்துள்ள பொது சிவில் சட்டம், திருமணம் மற்றும் விவாகரத்து, வாரிசு, திருமணம் செய்யாமல் சேர்ந்து வரும் லிவ்-இன் உறவுகள் மற்றும் அது தொடர்பான சட்டங்களை கொண்டுள்ளது. ஆனால் சட்டப்பிரிவு 1(2)ன்படி, அரசாணை வெளியிட்டு அதில் அரசு குறிப்பிடும் தேதியில் இருந்துதான் இவை நடைமுறைக்கு வரும். இது குறித்து இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜூனியர் அரசு வழக்கறிஞருக்கு தெரியாது என்பதால் தவறான தகவல் தந்திருப்பதாகவும், பொது சிவில் சட்டம் தொடர்பான பகுதிகள் நீக்கப்பட்டு திருத்தப்பட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும் என அரசு வழக்கறிஞர் தெளிவுபடுத்தி உள்ளார். அதோடு லிவ் இன் ஜோடிக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.