வாட்ஸ்அப் செய்திகளை ஆதாரமாக காட்டி கர்நாடக மாஜி டிஜிபி மனைவி, மகளிடம் விசாரணை: சொத்து தகராறு இருந்தது உண்மை தான் என்று வாக்குமூலம்
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கும் ஓய்வு பெற்ற போலீஸ் டிஜிபி ஓம்பிரகாஷ் கொலைக்கு சொத்து விவகாரம் காரணம் என்று அவரின் மகன் கார்த்திகேஷ் கொடுத்த புகார் அடிப்படையில் ஓம்பிரகாஷின் மனைவி மற்றும் மகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே அவுட்டில் ஓய்வு பெற்ற கர்நாடக மாநில போலீஸ் டிஜிபி ஓம்பிரகாஷ், நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் கொலை கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையில் தனது தந்தையின் படுகொலைக்கு தாய் பல்லவி மற்றும் தங்கை ரியாக்ருதி ஆகியோர் தான் காரணம் என்று ஓம்பிரகாஷின் மூத்த மகன் கார்த்திகேஷ், எச்.எஸ்.ஆர். லே அவுட் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதில்,’எனது தந்தை-தாய் இடையே கடந்த சில மாதங்களாக சொத்து தகராறு இருந்தது. கடந்த வாரம் தாயிடம் சண்டை போட்டு கொண்டு எனது அத்தை (தந்தையின் சகோதரி) சரிதா குமாரியின் வீட்டிற்கு தந்தை சென்று தங்கி இருந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அத்தை வீட்டில் இருந்த அப்பாவை எனது சகோதரி க்ருதி, கட்டாயப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்தார். அவர் வந்த இரண்டு நாளில் படுகொலை நடந்துள்ளதால், இந்த கொலைக்கு பின்னால் தாய் பல்லவி மற்றும் சகோதரி க்ருதியின் கை வரிசை இருக்கிறது’ என்று கூறியிருந்தார். அந்த புகாரை ஏற்று போலீசார் பல்லவி மற்றும் க்ருதியை கைது செய்தனர். ஆரம்பத்தில் கொலை செய்ததை மறுத்த பல்லவி, இந்த கொலையில் மகள் க்ருதிக்கு எந்த தொடர்புமில்லை என்று கூறிய வாக்குமூலம் அளித்ததாக தெரியவருகிறது.
இருப்பினும் போலீசார் படுகொலை தொடர்பாக பல கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்நிலையில் பல்லவியின் வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை வைத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கடந்த சில மாதங்களாக பல்வேறு போலீஸ் உயரதிகாரிகளுக்கு தனக்கு பாதுகாப்பு கோரி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். மேலும் சாப்பாட்டில் எனக்கு மெதுவாக கொல்லும் நஞ்சு வைக்கிறார்கள் என்றும், என்னை கண்காணிக்க பலரை சம்பளத்துக்கு நியமித்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அசோக்நகரில் உள்ள வீட்டில் தன்னை தங்க அனுமதிக்குமாறு தற்போதுள்ள டிஜிபிக்கு அவர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு பெண்ணுடன் தொடர்பு: மனைவி பரபரப்பு தகவல்
மாஜி டிஜிபி ஓம்பிரகாஷ் மனைவி பல்லவியிடம் நடத்திய விசாரணையில்,’ கடந்த ஒருவாரமாக எனக்கும் கணவருக்கும் இடையில் சண்டை இருந்தது. அடிக்கடி கைத்துப்பாக்கியை காட்டி என்னையும், மகள் க்ருதியையும் சுட்டு கொலை செய்வதாக மிரட்டி வந்தார். ஒரு கட்டத்தில் என்னை கொலை செய்ய முயற்சித்தார். எனது உயிரை காப்பாற்றி கொள்ள தீவிரமாக அவருடன் போராட்டம் நடத்தினேன். எனது கணவருக்கும் சில கும்பலுக்கும் இடையில் தொடர்பு இருந்தது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். எனது கணவருக்கும் சிக்கமகளூருவை சேர்ந்த பெண்ணுடன் தொடர்பு இருந்தது.
கடந்த 2015ல் டிஜிபியாக இவர் பணியாற்றிய போது, அந்த பெண் நிருபதுங்கா சாலையில் உள்ள அவரது அலுவலகம் முன்பு, ஓம்பிரகாஷ் தன்னை ஏமாற்றியதாக குற்றம்சாட்டி போராட்டம் நடத்தினார். அவர் தொடர்பில் வைத்திருந்த பெண்ணுக்கு சொத்து எழுதி கொடுக்கும் விஷயத்திலும் பிரச்னை இருந்தது. நான் கொலை செய்யவில்லை. சொத்துக்காக வேறு யாராவது கொலை செய்திருக்கலாம்’ என்று கூறியுள்ளார்.
என்ன தகராறு?
பீகார் மாநிலத்தை சேர்ந்த ஓம்பிரகாஷ், கடந்த 1981ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடக மாநிலத்தில் பணியில் சேர்ந்தார். வட மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் கர்நாடக மாநிலத்தின் சில மாவட்டங்களில் அசையா சொத்துகள் வாங்கி குவித்திருப்பதாக தெரியவருகிறது. வடகனரா மாவட்டம், தாண்டேலியில் சொத்து வாங்கியுள்ளார். கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலத்தை அவரது மூத்த சகோதரி சரிதாகுமாரி பதிவு செய்துள்ளதாகவும் இதற்கு அவரது மனைவி பல்லவி கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரியவருகிறது. இந்த நிலம் தொடர்பாக கணவன்-மனைவி இடையிலான தகராறும் படுகொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
எப்படி கொலை நடந்தது?
மாஜி டிஜிபி ஓம்பிரகாஷ் படுகொலை செய்வதற்கு முன் சமையல் அறைக்கு அழைத்து சென்று, கண்ணில் மிளகாய் பொடி தூவி, பின் அவரின் கை, கால்களை கட்டியுள்ளனர். அதன்பின் சமையல் அறையில் இருந்த கத்தியை பயன்படுத்தி கொலை செய்துள்ளனர். உடலில் பல இடங்களில் கத்தியால் குத்திய காயம் இருப்பதால், அவர் ரத்த வெள்ளத்தில் சமையல் அறையில் உயிரிழந்துள்ளதாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
அரசு மரியாதையுடன் தகனம்
படுகொலை செய்யப்பட்ட ஓம்பிரகாஷின் உடல், செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் பிரேதபரிசோதனை செய்தபின், மகனிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் எச்.எஸ்.ஆர். லே அவுட், 6வது செக்டாரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் பி.தயானந்தா உள்பட போலீஸ் அதிகாரிகள், போலீசார், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பின் மாலை வில்சன் கார்டன் மின்மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவரது மகன் கார்த்திகேஷ், இறுதி சடங்குகள் செய்தார்.
