பெண் மருத்துவர் பாலியல் பலாத்கார வழக்கு குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரும் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ வலியுறுத்தி உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் ஆர்ஜி கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சீல்டா நீதிமன்றம் கடந்த 20ம் தேதி குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற சிபிஐ கோரிக்கையை விசாரணை நீதிமன்றம் நிராகரித்தது. இதனை தொடர்ந்து குற்றவாளிக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து சிபிஐ உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சிபிஐ மனுவை ஏற்ற நீதிமன்றம் வருகின்ற 27ம் தேதி மேல்முறையீட்டு மனுவை நிதிமன்றம் விசாரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

