Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

விவாகரத்து கோரிய மனைவி, நீதிபதி மீது சரமாரி புகார் ‘ஏஐ’ தொழில்நுட்ப இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை: 1.30 மணி நேர வீடியோ; 24 பக்க தற்கொலைக் குறிப்பில் பகீர் தகவல்

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இயங்கும் தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பொறியாளராக அதுல் சுபாஷ்(34) என்பவர் பணியாற்றி வந்தார். உ.பியை சேர்ந்த இவருக்கு மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் 5 வயதில் மகன் உள்ளனர். கடந்த 2021ல் தம்பதிக்குள் பிரச்னை ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களது விவாகரத்து மற்றும் ஜீவனாம்ச வழக்குகள் உ.பியில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன. இதுதவிர சுபாஷ் மீது வரதட்சணை கொடுமை, குடும்ப வன்முறை என்று பல வழக்குகளை நிகிதா தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் மஞ்சுநாத் லேஅவுட் பகுதியில் தங்கியிருந்த அதுல் சுபாஷ், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது கழுத்தில் நீதி தேவை என்று எழுதப்பட்ட காகிதத்தை கட்டியிருந்தார். தகவலறிந்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார், அவரது மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது பி.என்.எஸ் பிரிவு 108 மற்றும் 3 (5) இன் கீழ் எப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது. நான்கு பேரில் நிகிதா சிங்கானியா, அவரது தாய், அவரது சகோதரர் மற்றும் அவரது மாமா ஆகியோர் அடங்குவர்.

முன்னதாக தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அதுல் சுபாஷ் 1.30 மணி நேர வீடியோவை பதிவு செய்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்திருந்தார். மேலும் 24 பக்க தற்கொலைக் குறிப்பு கடிதத்தையும் எழுதியிருந்தார். அதனை ேபாலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். அந்த வீடியோவில் அதுல் சுபாஷ் பேசுகையில், ‘கடந்த இரண்டு ஆண்டுகளில் எனது மனைவி எனக்கு எதிராக ஒன்பது வழக்குகளை தாக்கல் செய்தார். உத்தரபிரதேசத்தின் ஜான்பூரில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் 40 முறை ஆஜரானேன்.

எனது மனைவி முதலில் 1 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கேட்டார். பின்னர் 3 கோடி ரூபாய் கேட்டார். இதற்கிடையே குழந்தையை பாராமரிப்பதற்காக ஒவ்வொரு மாதமும் ரூ. 80,000 வழங்க நீதிமன்றம் எனக்கு உத்தரவிட்டது. குடும்ப நல நீதிபதிக்கு முன்னால் என்னை கொச்சைப்படுத்தினர். அப்போது அந்த நீதிபதி என்னை பார்த்து சிரித்தார். அப்போது அவர், ‘நீங்கள் இறந்தாலும், உங்கள் சொத்தின் மீது உங்களது மனைவிக்கு உரிமை உண்டு’ என்றும் கூறினார்.

ரூ.3 கோடிக்கும் குறைவாக தரவேண்டும் என்று உத்தரவிட வேண்டுமானால், 5 லட்சம் ரூபாய் தனக்கு வேண்டும் என்று நீதிபதி கோரினார்.

எனது தற்கொலை குறிப்பு கடிதத்துடன் மற்றொரு கடித்தையும் வைத்துள்ளேன். அதனை எனது மகன், அவரது 18 வயது பூர்த்தியடைந்த பின்னர் திறந்து பார்க்க வேண்டும். அதில் அவருக்கான பரிசு ஒன்றை வைத்துள்ளேன். எனது மனைவி எனது மகனை சந்திக்க அனுமதிக்கவில்லை. பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டேன். ஆனால் அந்த பணமே என் வாழ்க்கையை சீரழித்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

* வழக்குகளை வாபஸ் பெற ரூ.3 கோடி: மகனை பார்க்க ரூ.30 லட்சம்

தற்கொலை செய்து கொண்ட அதுல் சுபாஷின் சகோதரர் பிகாஸ் குமார் பெங்களூருவில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘சுபாஷ் மீது நிகிதா பல பொய் வழக்குகளை தொடர்ந்துள்ளார். இதனால், சுபாஷ் மனமுடைந்து போய்விட்டார். அந்த வழக்குகளை வாபஸ் பெற ரூ.3 கோடி தர வேண்டும் என்று நிகிதாவும் அவரது குடும்பத்தினரும் மிரட்டினர். அதோடு மகனை பார்க்க சுபாஷை அனுமதிக்கவில்லை. கடைசியில் மகனுக்கு 1 வயதாக இருக்கும்போதுதான் சுபாஷ் அவனை பார்த்தார். ரூ.30 லட்சம் தந்தால் மகனை பார்க்க அனுமதிப்பேன் என்று நிகிதா கூறிவிட்டார். சுபாஷ் சாவுக்கு காரணமான நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்து தண்டிக்க வேண்டும்’’ என்றார்.

* சமூக ஊடகங்களில் விளாசல்

செயற்கை நுண்ணறிவு பொறியாளர் அதுல் சுபாஷின் தற்கொலை விவகாரம், சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. அதில் ஒரு பதிவர், ‘அதுல் சுபாஷின் மனைவியும், நீதித்துறையும் அவரை ஏடிஎம் இயந்திரம் போல நடத்தி உள்ளன. நாளை, உங்களது மகன், உங்களது சகோதரர், உங்களது தந்தை அல்லது நீங்களாக கூட அதுல் சுபாஷை போன்று பாதிக்கப்படலாம். இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரையும் சென்றடையும் வகையில், ஒற்றுமையுடன் நாம் குரல் எழுப்ப வேண்டும். பெண்களுக்கான உரிமைகள் இருப்பது போல், ஆண்களுக்கும் உரிமைகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் மிகவும் முக்கியமானது’ என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில், ‘அதுல் சுபாஷின் மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்யுங்கள். இந்த சமூகம் நிகிதாவையும், அவருடைய குடும்பத்தினரையும் புறம்தள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.