Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

60 ஆண்டுகளாக வசித்து வந்தவர்கள் டெல்லியில் தமிழர்களின் வீடுகள் இடித்து தரைமட்டம்: பாஜ அரசின் நடவடிக்கைக்கு கண்டனம்

புதுடெல்லி: தென்கிழக்கு டெல்லியில் உள்ள பாராபுல்லா கழிவு நீர் கால்வாய் அருகே ஜங்க்புராவில் மதராசி முகாம் என்ற பெயரில் குடிசைப் பகுதி அமைந்துள்ளது. இங்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் குடும்பம் குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், பாரபுல்லா கழிவு நீர் கால்வாய் அடைப்பை சரி செய்ய வேண்டி இருப்பதால் மதராசி முகாம் கட்டிடங்களை இடித்து தரை மட்டமாக்க டெல்லி அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக அப்பகுதியில் குடியிருப்பவர்களுக்கு நோட்டீஸ் தரப்பட்டது. இதனை எதிர்த்த இப்பகுதி மக்கள், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், வீடுகளை ஜூன் 1ம் தேதிக்குள் அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, அப்பகுதியில் 370 குடும்பத்தினரில் 189 பேர் மட்டுமே தகுதியுடையவர்கள் என்று கூறி அவர்களுக்கு மட்டும் 40 கிமீ தூரத்தில் உள்ள நரேலாவில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. அந்த வீடுகளிலும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை. மற்றவர்களுக்கு வீடு ஒதுக்க கூட மறுத்துவிட்டனர். ஜங்க்புரா மதராசி முகாம் பகுதியில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் அருகில் உள்ள வீடுகளில் வேலை செய்து வருபவர்கள். 40 கிமீ தூரம் சென்றுவிட்டால் வீட்டு வேலைக்கு வரமுடியாது என்பதால் அருகிலேயே மாற்று இடம் தர வேண்டும் அல்லது வீடுகளை இடிக்கும் பணியை கைவிட வேண்டும் என்று டெல்லி பாஜ முதல்வர் ரேகா குப்தாவிடம் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், வீடுகளை இடிப்பதிலேயே அரசு நிர்வாகம் தீவிரமாக இருந்தது. மதராசி முகாம் குடியிருப்புகளை நேற்று புல்டோசர்கள் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. டெல்லி பொதுப்பணித்துறை, டெல்லி நகர்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியம் மற்றும் வருவாய்த் துறை, காவல் துறை ஆகியவை இணைந்து இந்த பணியை மேற்கொண்டன. ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர். பல ஆண்டுகளாக வசித்து வந்த தங்கள் வீடுகள் இடிக்கப்படுவதை பார்த்து தமிழர்கள் கண்ணீர் விட்டு கதறினர். உரிய மாற்று ஏற்பாடு செய்யாமல் வீடுகளை இடித்து தரை மட்டமாக்கிய டெல்லி பாஜ அரசுக்கு குடியிருப்புவாசிகளும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

‘எந்த முகத்தை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் பாஜ ஓட்டு கேட்கும்?’

ஆம் ஆத்மியின் டெல்லி தலைவர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், ‘மதராசி முகாம் குடியிருப்புகள் இடித்து தரைமாக்கப்பட்டுள்ளன. டெல்லி முதல்வர் குடிசைப்பகுதி மக்களை அகற்ற மாட்டோம் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், தற்போது ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். புல்டோசர்களை கொண்டு பாரபுல்லா மதராசி முகாம் அகற்றப்பட்டுள்ளது. தேசிய தலைநகரில் தமிழர்கள் எதிர்கொள்ளும் இந்த நிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்தில் கொள்ள வேண்டும். எந்த முகத்தை வைத்துக் கொண்டு பாஜ தமிழ்நாட்டில் ஓட்டு கேட்கும்,’ என்று தெரிவித்துள்ளார்.

எங்கே போவோம்.... தமிழர்கள் கண்ணீர்

ஜங்புரா பகுதியில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள். வீட்டை இழந்து சாலையோரத்தில் அமர்ந்திருந்த மூதாட்டி ஜானகி கூறுகையில், ‘நான் கடந்த 60 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறேன். என் குழந்தைகள் இங்குதான் பிறந்தார்கள். எல்லாம் இங்கேயே நடந்தது. இப்போது, நாங்கள் சாலையில் அமர்ந்திருக்கிறோம். எங்கு செல்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை,’ என்று தெரிவித்தார். மற்றொரு பெண் சுமதி கூறுகையில், ‘கடந்த 30 ஆண்டுகளாக நான் இங்குதான் வசித்து வருகிறேன்.பல தலைமுறையினர் இங்கு வசித்து வருகின்றனர்.எனது மகள் கர்ப்பமாக இருக்கிறார். எங்களுக்கு வீடுகள் கொடுப்பதாக கூறினார்கள். ஆனால், வீடுகள் கொடுக்கவில்லை,’என்றார் கண்ணீருடன். மற்றொரு குடியிருப்புவாசி சாந்தி கூறுகையில், ‘இங்கு வாழ்ந்து வரும் பலரும் இங்குதான் வேலை செய்கிறார்கள்.அவர்களுக்கு வாழ்வாதாரமும் இது தான்.இங்குள்ள 150-160 பேருக்கு மட்டுமே குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.நாங்கள் எங்கே போவது? ,எங்கே வாழவது? என்று தெரியவில்லை? என்றார்.