Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காங்கிரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் கர்நாடக பாஜ எம்எல்ஏக்கள் 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக பாஜ எம்எல்ஏக்கள் இரண்டு பேரை 6 வருடம் கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. கர்நாடகாவில் கடந்த 2019ல் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சியை கவிழ்க்க காங்கிரசில் இருந்து 18 எம்எல்ஏக்களை பாஜ இழுத்தது. இவர்களில் எஸ்.டி.சோமசேகர் பெங்களூரு யஷ்வந்தபுரா தொகுதியில் பாஜவின் சார்பில் கடந்த 2023ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பாஜவின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தாலும் எஸ்டி சோமசேகர் காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அத்துடன் பாஜவின் போராட்டங்களில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார். அது போல் மீண்டும் எம்எல்ஏவான சிவராம் ஹெப்பார் நடவடிக்கையும் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருந்தன. சட்டப்பேரவையில் கூட இவர்கள் இருவரும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டனர்.

இது மட்டுமின்றி முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோருடன் அடிக்கடி சந்தித்து பேசியதால் இரண்டு பேரும் மீண்டும் காங்கிரசில் இணைய போவதாக கூறப்பட்டது. ஆனால், எஸ்டி சோமசேகர் பாஜவில் இருக்கிறேன் என தொடர்ந்து கூறி வந்தார். அதே நேரம் எஸ்டி சோமசேகர் மற்றும் சிவராம் ஹெப்பார் பாஜவில் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் ஆர். அசோக் வெளிப்படையாக கூறி வந்தார்.

இது போன்ற சூழ்நிலையில் பாஜவின் ஒழுங்கு கமிட்டி குழு கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட காரணத்திற்காக எஸ்டி சோமசேகர் மற்றும் சிவராம் ஹெப்பார் ஆகிய இரண்டு பேரையும் 6 வருடம் கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. பாஜ தலைமை எடுத்த இந்த நடவடிக்கையை முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா, மாநில தலைவர் விஜயேந்திரா, எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக், எம்எல்சி சிடி ரவி உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.

* பாலியல் குற்றவாளிகளா? டிகே சிவகுமார் கேள்வி

‘பாஜவில் இருந்து எம்எல்ஏக்கள் எஸ்டி சோமசேகர், சிவராம் ஹெப்பார் நீக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக நிருபர்களிடம் துணை முதல்வர் டிகேசிவகுமார் கூறியதாவது: எம்எல்ஏக்கள் எஸ்டி சோமசேகர், சிவராம் ஹெப்பார் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டார்களா? அதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்ட முனிரத்னா மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. முறைகேடு, ஊழல், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டால் மட்டுமே பாஜவில் இருக்க முடியும். அதுதான் தற்போது நடந்துள்ளது. இதுதான் பாஜவின் பாரம்பரியம் என்றார்.