பிஜப்பூர்: சட்டீஸ்கரின் பிஜப்பூரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 22 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சட்டீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள காடுகளில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் கர்ரேகுட்டா மலைப்பகுதியில் நேற்று காலை பாதுகாப்பு படையினர் விரைந்து நக்சல்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மாவட்ட ரிசர்வ் காவலர், பஸ்தார் வீரர்கள், சிறப்பு பணிக்குழு, மாநில காவல்துறையின் அனைத்து பிரிவுகள், மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் கோப்ரா பிரிவினர் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மறைந்திருந்த நக்சல்கள் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதனை தொடர்ந்து வீரர்கள் நடத்திய என்கவுன்டரில் 22 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மேலும் அந்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை மற்றும் துப்பாக்கி சூடு நடந்து வருகின்றது. கோப்ரா பிரிவின் அதிகாரி உட்பட குறைந்தது 6 பாதுகாப்புப் பணியாளர்கள் காயமடைந்தனர். காயமடைந்த அனைத்து வீரர்களும் ஆபத்தில் இருந்து மீண்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சட்டீஸ்கரில் இந்த ஆண்டு இதுவரை தனித்தனி என்கவுன்டர்களில் 168 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில், பிஜப்பூர் உட்பட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தர் பிரிவில் 151 பேர் கொல்லப்பட்டனர்.


