மும்பை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும், எஸ்ஐஆருக்கு எதிராகவும் மும்பையில் உள்ள ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 10ம் தேதி நடத்தியப் போராட்டத்தில் பாலிவுட் நடிகர் இம்ரான் கான் கலந்து கொண்டார். அமெரிக்க குடியுரிமை கொண்டவரான அவர், உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டதாகக் கூறி, வெளிநாட்டவர் மண்டல பதிவு அலுவலகம் கடந்த அக்டோபர் 28ம் தேதி அவர் இந்தியாவை விட்டு வெளியேற நோட்டீஸ் அனுப்பியது.
இதனை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் தரப்பில் தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி மகேஷ் சந்திர திரிபாதி மற்றும் நீதிபதி அத்வைத் சேத்னா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அடிப்படை உரிமைகளுக்கு போராடும் தகுதி இந்திய குடிமக்களுக்கு மட்டுமே உண்டு. இந்தியர் யாராவது இதனை வேறொரு நாட்டில் செய்திருந்தால் பொறுத்து கொள்வார்களா? இதே போல், அமெரிக்காவில் நடந்திருந்தால் அடுத்த விமானத்தில் இந்தியாவுக்கு நாடு கடத்தி இருப்பார்கள். இம்ரானுக்கு போராட்டங்களில் பங்கேற்கும் ஆர்வமிருந்தால் இந்திய குடியுரிமை பெற்று கொள்ளட்டும். அவர் ஒரு வெளிநாட்டவர் என்பதால் இந்தியா தயவு காட்டுகிறது. அவரது இது போன்ற நடவடிக்கைகளை பொறுத்து கொண்டிருக்க முடியாது. இந்தியர்களுக்காக போராட்டத்தில் கலந்து கொள்ள அவருக்கு என்ன உரிமை இருக்கிறது?
இந்தியர்களின் உரிமைகளும் வெளிநாட்டவரின் உரிமைகளும் வெவ்வேறானவை. இம்ரான் இந்தியராக இருந்தால் அதன் நிலை வேறு. எஸ்ஐஆருக்கும் அவருக்கு துளியும் தொடர்பில்லை. எனவே வெளிநாட்டவரான அவருக்கு போராட்டத்தில் கலந்து கொள்ளும் உரிமையில்லை. அவர் கைதாகி விடுதலையான பின்பு சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவுகள் அவரை பின்பற்றும் இளைஞர்களை தூண்டுவதாக உள்ளன என கடுமையாக சாடிய நீதிபதிகள் நடிகர் இம்ரான் கான் நீதிமன்றத்திடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து, இம்ரான் கான் தரப்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கடிதம் மற்றும் எதிர்காலத்தில் அவர் இது போன்ற போராட்டங்களில் கலந்து கொள்ள மாட்டார் என்ற உறுதிமொழி பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டது.


