புதுடெல்லி: பீகாரில் நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் பீகாரில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தின்படி வாக்காளர் வரைவு பட்டியல் இன்று வௌியாக உள்ளது. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று வௌியிட்ட அறிக்கையில், “பீகாரில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தின் ஒருபகுதியாக வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வௌ்ளிக்கிழமை(இன்று) வௌியிடப்படும்.
இந்த பட்டியல் 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் காகித வடிவிலும், டிஜிட்டல் தரவுகளாகவும் தரப்படும். பீகாரின் தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் 243 சட்டப்பேரவை தொகுதிகளின் தேர்தல் பதிவு அதிகாரிகள் ஆகியோரிடம், விடுபட்ட தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கவோ அல்லது தகுதியற்ற வாக்காளர்களின் பெயர்களை நீக்கவோ, மற்றும் வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாகவோ, எந்தவொரு வாக்காளர்களோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளோ ஆகஸ்ட் 1(இன்று) முதல் செப்டம்பர் 1 வரை கோரிக்கைகளை முன்வைக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

