ரூ.14,852 கோடி வங்கி மோசடி வழக்கு அனில் அம்பானி மகன் அன்மோல் அம்பானி மீது சிபிஐ வழக்கு பதிவு: அதிரடி சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
புதுடெல்லி: ரூ.14,852 கோடி வங்கி கடனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த விவகாரத்தில், தொழிலதிபர் அனில் அம்பானியின் மகன் அன்மோல் அம்பானி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் தலைவர் அனில் அம்பானி. இவர் தன் நிறுவனங்களின் பெயரில் வாங்கிய வங்கி கடன்களை சட்ட விரோதமாக பிற நிறுவனங்களுக்கு பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ), வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இந்த மோசடி குறித்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்த வழக்கு விசாரணைக்கு அனில் அம்பானி அண்மையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதன் தொடர்ச்சியான அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி மதிப்பிலான சொத்துகள் அண்மையில் முடக்கப்பட்டன.
இந்நிலையில் அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் அனில் அம்பானி ரூ.14,852 கோடி அளவு வங்கி கடனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஜென் அன்மோல் அனில் அம்பானி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், “அனில் திருபாய் அம்பானி நிறுவனங்களான அம்பானி ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் லிமிடெட்(ஆர்எச்எஃப்எல்) யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உள்பட 18 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து ரூ.5572.35 கோடி கடன் பெற்றுள்ளது. இதேபோல், ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் லிமிடெட்(ஆர்சிஎஃப்எல்) 31 வங்கிகள் மற்றும் மகாராஷ்டிரா வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடம் இருந்து ரூ.9,280 கோடி கடனாக வாங்கி உள்ளது.
இந்த கடன் தொகைகளுக்கான தவணைகள் மற்றும் நிதியை திருப்பி செலுத்தாமல் அந்த நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளன. மேலும், கடனாக பெற்ற நிதியை தவறாக பயன்படுத்தி திசை திருப்பி உள்ளன. இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் ஜெய் அல்மோல் அனில் அம்பானி மீது இரண்டு வழக்குகளில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், ஜெய் அன்மோல் அனில் அம்பானிக்கு சொந்தமான வீடுகள் மற்றும் இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனைகளின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன” என்றனர்.