புதுடெல்லி: ராஜீவ்காந்தி இரண்டு முறை பெயில் ஆனவர் என்று மணிசங்கர் அய்யர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் அய்யர், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் கூறுகையில், ‘ராஜீவ் காந்தி படிக்க முடியாமல் திணறினார். கேம்பிரிட்ஜ் பல்கலை தேர்வில் அவர் பெயில் ஆனார். பின்னர் அவர் லண்டன் இம்பீரியல் கல்லூரிக்குச் சென்றார். ஆனால் அங்கும் தோல்வியடைந்தார். கேம்பிரிட்ஜில் அவருடன் நானும் படித்தேன். பல்கலைக்கழகத்தின் நற்பெயர் கெடும் என்பதால் கேம்பிரிட்ஜில் பெயில் ஆகும் மாணவர்கள் மிகவும் குறைவு.
இருந்தும் ராஜீவ் பெயில் ஆனார். அவர் பிரதமர் பதவியை ஏற்ற போது, 2 முறை பெயில் ஆன பைலட் பிரதமராகி இருக்கிறார் என்று நினைத்தேன். மேலும் அப்படிப்பட்டவரை ஏன் பிரதமராக்க வேண்டும் என்று நினைத்தேன். அதே போல் ஒழுங்காக படிக்க முடியாதவர் எப்படி பிரதமராகலாம் என்று அப்போது பலர் கேள்வி எழுப்பினர்’ என்று ெதரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் மீது அவரது குற்றச்சாட்டு தற்போது வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள பா.ஜ,’ வேஷம் கலையட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது.


