சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதா நகைகள் அரசுக்கு சொந்தம்: தீபாவின் கோரிக்கை மனு தள்ளுபடி; கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு
பெங்களூரு: ஜெயலலிதாவுக்கு சொந்தமான தங்கம், வைர நகைகளை தங்களிடம் ஒப்படைக்ககோரி தீபா தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கடந்த 1991-96 வரை தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்தார். இந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து குவிக்கப்பட்டதாக ஜெயலலிதா மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தமிழக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், ஜெயலலிதா வசித்த வீட்டில் சோதனை நடத்திய போது தங்கம், வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள், விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்த நகைகள் கர்நாடக அரசின் கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த நகைகள் தொடர்பான வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.ஏ. மோகன் , ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட தங்கம், வைரம் மற்றும் வெற்றி பொருட்களை கர்நாடக அரசு தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதற்கிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா , ஜெயலிதாவுக்கு சொந்தமான நகைகளை ஏலத்தில் விடக்கூடாது. அதை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் தீபக் ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
அதை விசாரணை நடத்திய நீதிபதி கே.ஏ.மோகன், சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்த சொத்துகள் வாரிசுகளிடம் ஒப்படைக்க முடியாது என்று தீர்ப்பளித்தார். பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தீபா மற்றும் தீபக் ஆகியோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதம் முடிந்த பின் நீதிபதி வழங்கிய தீர்ப்பில், சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம், உச்சநீதிமன்றம் மற்றும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஆகியவை வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில் பறிமுதல் செய்த சொத்துகள் அரசுக்கு சொந்தம் என்பதை உறுதி செய்துள்ளதால், உயர்நீதிமன்றமும் அதை உறுதி செய்கிறது. ஆகவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


