Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராஜஸ்தான், பஞ்சாப், இமாச்சல் மாநிலத்தில் அலர்ட் பள்ளிகள் மூடல்; போலீஸ் விடுமுறை ரத்து

பாகிஸ்தானுடன் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் 532 கி.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. ராஜஸ்தான் எல்லை சுமார் 1,070 கி.மீ. வரை நீண்டுள்ளது. இதையடுத்து இந்த 2 மாநிலங்களும் அலர்ட் செய்யப்பட்டுள்ளன. அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில், பஞ்சாப் மாநிலத்தின் ஆறு எல்லை மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டுள்ளன. மேலும் அனைத்து காவல்துறையினரின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெரோஸ்பூர், பதான்கோட், பாசில்கா, அமிர்தசரஸ், குருதாஸ்பூர், டரன் டரன் மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் பஞ்சாப் காவல்துறையின் அனைத்து அதிகாரிகள்,ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான நபர் அல்லது உரிமை கோரப்படாத பொருள் ஏதேனும் இருந்தால், காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அமிர்தசரஸ் காவல் ஆணையர் குர்பிரீத் சிங் புல்லர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்தில் இரவு 9 மணி முதல் எட்டு மணி நேர மின்தடை அமலில் இருக்கும் என்று மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். சிறை மற்றும் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.

பஞ்சாப் எல்லையை ஒட்டியுள்ள இமாச்சல பிரதேச மாநிலத்தின் ஹமிர்பூர், உனா, பிலாஸ்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாபா பாலக் நாத், மா சிந்த்பூர்ணி மற்றும் மா நைனா தேவி போன்ற பிரபலமான கோயில்கள் ஹமிர்பூர், உனா மற்றும் பிலாஸ்பூர் மாவட்டங்களில் அமைந்துள்ளதால், அங்கு போலீசார் பாதுகாப்பு சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். ராஜஸ்தான் அரசும் போலீசார் விடுமுறையை ரத்து செய்துள்ளது. மேலும் பாக். எல்லையில் உள்ள ஐந்து மாவட்டங்களில் பள்ளிகளை மூடியுள்ளது. ஸ்ரீ கங்காநகர், பிகானர், ஜோத்பூர், ஜெய்சால்மர், பார்மர் மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஜோத்பூர் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பிகானர், அஜ்மீரில் உள்ள கிஷன்கர் மற்றும் ஜோத்பூர் விமான நிலையங்களில் விமான நடவடிக்கைகள் மே 10 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேற்குவங்க மாநிலத்திலும் அனைத்து மாநில அரசு ஊழியர்களின் விடுமுறைகளையும் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.