புதுடெல்லி: தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவை சேர்ந்த சண்முகம், எம்.எம்.அப்துல்லா, பி.வில்சன், பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன் ஆகிய ஆறு எம்பிக்களின் பதவிக்காலம் கடந்த 25ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது. அவர்களுக்கு மாநிலங்களவையில் வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கடைசி நாளில் அன்புமணி மட்டும் அவைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதையடுத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் அடிப்படையில் திமுகவை சேர்ந்த மூன்று எம்பிக்கள் அதாவது பி.வில்சன், கவிஞர் ராஜாத்தி என்கிற சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம், அதேப்போன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் மாநிலங்களவை எம்பிக்களாக கடந்த 25ம் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில் அதிமுக தரப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பேர் அதாவது இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் நாடாளுமன்ற மாநிலங்களவை எம்பியாக நேற்று தமிழில் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு மாநிலங்களைவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
