கவுகாத்தி: இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி, 408 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்ரிக்கா 1-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது. இந்நிலையில், 2வது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் கடந்த 22ம் தேதி துவங்கியது.
முதல் இன்னிங்சில் அட்டகாசமாக ஆடிய தென் ஆப்ரிக்கா 489 ரன் குவிக்க, இந்தியா 201 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் 2வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்ரிக்கா, மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 94 ரன்கள் குவிக்க, அந்த அணி, 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்னுடன் டிக்ளேர் செய்தது. அதனால், வெற்றி பெற 549 ரன் என்ற அசாத்திய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணியின் 2 விக்கெட்டுகள் சரிய, 27 ரன்னுடன் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், கடைசி நாளான நேற்று இந்தியா 2வது இன்னிங்சை தொடர்ந்தது. தென் ஆப்ரிக்கா அணியின் பந்து வீச்சாளர்கள் சைமன் ஹார்மர் (6 விக்கெட்), கேஷவ் மஹராஜ் (2 விக்கெட்) துல்லியமாக பந்து வீசி இந்திய அணியை ஆட்டம் காணச் செய்தனர். அதனால், ரவீந்திர ஜடேஜாவை (54 ரன்) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுடன் நடையைக் கட்டினர். 63.5 ஓவரில் இந்தியா 140 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானதால், 408 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா சாதனை வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம், 2-0 என்ற கணக்கில் இந்தியாவை வாஷ்அவுட் செய்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக தொடரையும் கைப்பற்றி உள்ளது. அந்த அணியின் மார்கோ யான்சன் (93 ரன், 7 விக்கெட்) ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக சைமன் ஹார்மர் (17 விக்கெட்) அறிவிக்கப்பட்டார்.
டெஸ்ட் வரலாற்றில் இந்தியாவின் மோசமான தோல்விகள்
எதிரணி ஆண்டு இடம் ரன் வித்தியாசம்
தென் ஆப்ரிக்கா 2025 கவுகாத்தி 408
ஆஸ்திரேலியா 2004 நாக்பூர் 342
பாகிஸ்தான் 2006 கராச்சி 341
வெஸ்ட் இண்டீஸ் 1958 கொல்கத்தா இன்னிங்ஸ்
மற்றும் 336 ரன்
ஆஸ்திரேலியா 2017 புனே 333
* டபிள்யுடிசி பட்டியல் 5ம் இடத்தில் இந்தியா
தென் ஆப்ரிக்காவிடம் 2வது டெஸ்ட் போட்டியிலும் மோசமான தோல்வியை தழுவிய இந்தியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 (டபிள்யுடிசி) புள்ளிப் பட்டியலில் 5ம் இடத்துக்கு சரிந்தது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா அணி 100 சதவீத வெற்றியுடன், 48 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது. தென் ஆப்ரிக்கா 75 சதவீத வெற்றி, 38 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது. இலங்கை அணி, 66.67 சதவீத வெற்றி, 16 புள்ளிகளுடன் 3ம் இடத்தை பிடித்துள்ளது. பாகிஸ்தான், 50 சதவீத வெற்றி, 12 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் உள்ளது. இந்தியா, 9 போட்டிகளில் 4ல் வெற்றி, 4ல் தோல்வியுடன், 48.15 சதவீத வெற்றி, 52 புள்ளி பெற்று 5ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இப்பட்டியலில் இங்கிலாந்து 6, வங்கதேசம் 7, வெஸ்ட் இண்டீஸ் 8, நியூசிலாந்து 9வது இடங்களில் உள்ளன.
* டெஸ்ட்களில் ஒர்ஸ்ட் தோல்விகள்
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 408 ரன் வித்தியாசத்தில் படுமோசமான தோல்வியை தழுவியது. ரன்கள் அடிப்படையில் பார்த்தால், இந்திய டெஸ்ட் வரலாற்றில் இதுவே அதிக வித்தியாச தோல்வி. இதற்கு முன், கடந்த 2004ல், நாக்பூரில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா 342 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தவிர, உள்நாட்டில் நடக்கும் போட்டிகளில், 3வது முறையாக தற்போது, இந்தியா தொடரை இழந்துள்ளது. தவிர, கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக, உள்நாட்டில் நடந்த 7 போட்டிகளில் ஐந்தில் இந்தியா தோல்வியை தழுவி உள்ளது.


