Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

இந்தியா 9 விக்கெட்டுக்கு 503 டிக்ளேர்: ஜுரெல் 115*, பன்ட் 63, ஜடேஜா 43: இலங்கை திணறல்

கொழும்பு: இலங்கை அணியுடனான 2வது டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 503 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. அபாரமாக விளையாடிய துருவ் ஜுரெல் சதம் விளாசினார். இலங்கை 8 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறி வருகிறது. சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 300 ரன் எடுத்திருந்தது. துருவ் ஜுரெல் 7, சரண்ஷ் ஜெயின் 4 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். சரண்ஷ் மேற்கொண்டு 2 ரன் மட்டுமே சேர்த்து வெளியேற, முதல் நாளில் 3 ரன் எடுத்திருந்தபோது காயம் காரணமாக பெவிலியன் திரும்பிய ரிஷப் பன்ட் நேற்று மீண்டும் களமிறங்கினார்.

ஜுரெல் பன்ட் ஜோடி 7வது விக்கெட்டுக்கு 112 ரன் சேர்த்தது. பன்ட் 63 ரன் (89 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி நுவந்தா சுழலில் உதரா வசம் பிடிபட்டார். அடுத்து வந்த மானவ் சுதர் 18 ரன், சிராஜ் 3 ரன் எடுத்து ஜெயசூரியா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் உறுதியுடன் விளையாடிய ஜுரெல் சதம் விளாசி அசத்தினார். இந்தியா 138 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 503 ரன் குவித்த நிலையில், முதல் இன்னிங்சை முடித்துக்கொள்வதாக கேப்டன் கில் அறிவித்தார். துருவ் ஜுரெல் 115 ரன் (177 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்), பிரசித் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை பந்துவீச்சில் அசிதா பெர்னாண்டோ 4, ஜெயசூரியா, நுவந்தா தலா 2, லாகிரு குமாரா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 3 ஓவரில் 8 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறிய நிலையில் 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. உதரா 1 ரன், ஜெயசூரியா 2 ரன்னில் அவுட்டாகினர். கமில் மிஷரா 5 ரன்னுடன் களத்தில் உள்ளார். இலங்கை அணி ஃபாலோ ஆன் நெருக்கடியை தவிர்க்கவே கடுமையாகப் போராட வேண்டிய கட்டாயத்துடன் இன்று 3ம் நாள் சவாலை சந்திக்கிறது.

துருவ் ஜுரெல் 7வது அதிசயம்!

இலங்கை மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்சில் 7வது வீரராகக் களமிறங்கி சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை துருவ் ஜுரெல் படைத்துள்ளார். ஏற்கனவே நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி (2009ல் 140 ரன்), பாகிஸ்தானின் சல்மான் ஆஹா (2023ல் 132* ரன்), சர்பராஸ் அகமது (2014ல் 103 ரன்) ஆகியோர் 7வது இடத்தில் விளையாடி சதம் அடித்துள்ளனர். அந்த வரிசையில் 4வதாக ஜுரெல் இணைந்துள்ளார். ஹர்திக் பாண்டியா 2017ல் பல்லெகெலே மைதானத்தில் விளையாடிய டெஸ்டில் 8வது பேட்ஸ்மேனாகக் களமிறங்கி 108 ரன் எடுத்துள்ளார். சர்வதேச போட்டியில் அவர் இதுவரை அடித்த ஒரே சதம் இது மட்டுமே.

தோனியை முந்திய பன்ட்

வெளிநாட்டு அல்லது நடுநிலையான மைதானங்களில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனை ரிஷப் பன்ட் வசமாகி உள்ளது. கொழும்பு டெஸ்டில் நேற்று 2,500 ரன் மைல்கல்லை கடந்த பன்ட் (சராசரி 41.68), எம்.எஸ்.தோனியின் சாதனையை (2,496 ரன்) முறியடித்து முதலிடம் பிடித்தார். டாப் 5ல் பரூக் இன்ஜினியர் (1,209 ரன்), சையது கிர்மானி (1,109 ரன்), கிரண் மோரே (901) இடம் பெற்றுள்ளனர்.

95 மீட்டர் இமாலய சிக்சரில் நொறுங்கிய சோலார் தகடுகள்

இந்திய இன்னிங்சில் 90வது ஓவரை வீசிய லாகிரு குமாரா, பந்தை கால் திசையில் அளவு குறைவாகப் போட… அதை எதிர்கொண்ட ரிஷப் பன்ட் இமாலய சிக்சருக்கு தூக்கி மிரட்டினார். 95 மீட்டர் தூரம் பயணித்த பந்து ஸ்டேடியத்தின் கூரையில் பட்டுத் தெறித்து அரங்குக்கு வெளியே பறந்து மறைந்தது. டிவி ரீப்ளேயில் கூரையின் மேலே பதிக்கப்பட்டிருந்த சோலார் பேனல்களைப் பந்து பதம் பார்த்ததில் கடுமையான சேதம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.