Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பரவல் அதிகம்; இந்தியாவில் 3.4 கோடி பேர் ஆஸ்துமா நோயால் பாதிப்பு: சிறப்பு மருத்துவ நிபுணர்கள் தகவல்

ஆஸ்துமா என்பது ஒரு சுவாசக் கோளாறு. சுவாச மண்டலத்தின் காற்றுப் பாதைகள் சுருங்குவதால் இப்பாதிப்பு ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு நடப்பாண்டு (2026) மே மாதத்தின் முதல்வாரத்தில் உலக ஆஸ்துமா விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் படி உலகளவில் சுமார் 262 மில்லியன் ஆஸ்துமா நோயாளிகள், அதாவது 26.2 கோடி பேர் உள்ளனர். சராசரியாக 4.60 லட்சம் இறப்புகள் நிகழ்கிறது. இதில் இந்தியாவை பொறுத்தவரை 3.4 கோடி பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனனர். 15 வயது முதல் 45 வயது வரையுள்ள பெண்களில் சுமார் 2 சதவீதம் பேரும், 12 வயது முதல் 19 வயது வரையுள்ள பெண்களில் சுமார் ஒரு சதவீதம் பேரும் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுகின்றனர்.

ஆண்களை பொறுத்தவரை 16 வயது முதல் 49 வயது வரையுள்ள ஒரு சதவீதம் பேருக்கு ஆஸ்துமா பாதிப்பு உள்ளது. இதேபோல் குழந்தைகளுக்கு 4 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை ஆஸ்துமாவின் தாக்கம் இருப்பதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்துமா இறப்புகளை பொறுத்தவரை பொருளாதார வளர்ச்சி குறைந்த மற்றும் நடுத்தர பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகளில் அதிகம் நிகழ்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஆஸ்துமா சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: ஆஸ்துமா என்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பாதிக்கும் ஒரு பொதுவான நோயாகும். இது தொற்றுநோய் அல்ல. மனித நுரையீரலில் உள்ள காற்றுப்பாதைகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் குறுகலால் ஆஸ்துமா உருவாகிறது.

சுவாசிப்பதில் சிரமம், மார்பு இறுக்கம், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்றவை இதன் அறிகுறிகளாகும். ஆஸ்துமா நோய்க்கு சில காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக இருப்பது ஒவ்வாமை. சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசு, தொழிற்சாலை கழிவுகள் போன்றவை சுவாசக்குழாய்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் மூலமே சமீப ஆண்டுகளாக ஆஸ்துமா அதிகளவில் பரவி வருகிறது. செய்யும் பணிகளும் இதற்கொரு காரணமாக அமைகிறது. குறிப்பாக பஞ்சாலைகள், அதிக புகை வெளியேறும் தொழிற்சாலைகள், சிமெண்ட் தொழிற்சாலைகள், கல் உடைக்கும் தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர் ஆஸ்துமாவின் தாக்கத்தால் அதிகளவில் சிகிச்சைக்கு வருகின்றனர்.

தகுந்த பாதுகாப்பு மற்றும் உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றுவதும் பாதிப்புகளுக்கு காரணமாகிறது. இது மட்டுமன்றி ஆஸ்துமாவிற்கு பரம்பரையும் ஒரு காரணம். பெற்றோர் அல்லது முன்னோர்கள் யாருக்கேனும் இந்த நோய் தாக்கியிருந்தால் அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஏற்படுகிறது. ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் தூசிநிறைந்த சூழலை கட்டாயம் தவிர்க்க வேண்டும். படுக்கை, தலையணை உறைகளை பயன்படுத்த வேண்டும். அவற்றை அவ்வப்ேபாது சுத்தப்படுத்த வேண்டும். குறிப்பாக பஞ்சு தலையணைகளை தவிர்க்க வேண்டும். தரைவிரிப்புகளை சுத்தம் செய்ய வேண்டும். செல்லப்பிராணிகளை படுக்கை அறைகளில் அனுமதிக்க கூடாது.

அவற்றை வாரம் தோறும் தவறாமல் குளிப்பாட்ட வேண்டும். ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆஸ்துமா பாதிப்புகள் கண்டறியப்பட்டால் உடனடியாக அதனை தவிர்ப்பதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். ஆஸ்துமா பாதித்தவர்கள் புகை பிடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு அருகில் வைத்து புகை பிடிக்கும் சூழலையும் தவிர்க்க வேண்டும். மகரந்த பாசிகள், பூஞ்சைகள் இருக்கும் இடங்களையும் தவிர்க்க வேண்டும். சரியான இடைவெளியில் இந்த நோய்க்கான மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியதும் மிகவும் அவசியம். இவ்வாறு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கூறினர்.

உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் படி இந்தியாவை பொறுத்தவரை 3.4 கோடி பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனனர். சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசு, தொழிற்சாலை கழிவுகள் போன்றவை சுவாசக்குழாய்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் மூலமே சமீப ஆண்டுகளாக ஆஸ்துமா அதிகளவில் பரவி வருகிறது. தகுந்த பாதுகாப்பு மற்றும் உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றுவதும் பாதிப்புகளுக்கு காரணமாகிறது. இது மட்டுமன்றி ஆஸ்துமாவிற்கு பரம்பரையும் ஒரு காரணம்.

இது தொற்று நோய் அல்ல

‘‘ஆஸ்துமா என்பது ஒரு தொற்றுநோய் என்ற பயம் பெரும்பாலானவர்களுக்கு உள்ளது. நிச்சயமாக ஆஸ்துமா என்பது ஒரு தொற்று நோய் அல்ல. இந்த வகையில் ஆஸ்துமா பாதித்தவர்களுக்கு எந்த நிலையிலும் நாம் பயத்தை ஏற்படுத்தக்கூடாது. குறிப்பாக குழந்தைகளிடம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடவே கூடாது. அவர்களின் வயதிற்கு ஏற்ற நடவடிக்கைகளுக்கு அனுமதிக்க வேண்டும். ஆஸ்துமா பற்றிய சுயவிழிப்புணர்வை குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் ஏற்படுத்துவதும் மிகவும் முக்கியம். ஆஸ்துமா என்பது சளி மற்றும் காய்ச்சல் போன்றது தான். ஆஸ்துமாவை நன்கு கட்டுப்படுத்தும் நோயாளிகளால் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிகளிலும் ஈடுபட முடியும்,’’ என்றும் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகில் ஆண்டுக்கு 26 கோடி பேர் பாதிப்பு

ஆஸ்துமா என்பது ஒரு நாள்பட்ட அதாவது நீண்டகால நோயாகும். இது ஒரு நபரின் சுவாசக் குழாயைப் பாதிக்கிறது. இதில், நோயாளி சுவாசிப்பதில் சிரமம், மார்பு இறுக்கம், இருமல் மற்றும் விசில் சத்தங்களை எதிர்கொள்கிறார். தூசி, புகை, மகரந்தம், வானிலை மாற்றம் அல்லது மன அழுத்தம் காரணமாக இந்தப் பிரச்னை மேலும் அதிகரிக்கிறது. ஆஸ்துமா ஒரு சுவாசக் கோளாறு. சுவாச மண்டலத்தின் காற்றுப் பாதைகள் சுருங்குவதால் இப்பாதிப்பு ஏற்படுகிறது. உலகில் ஆண்டுக்கு 26 கோடி பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுகின்றனர். 4.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதில் பெரும்பாலான மரணம் தடுக்க முடிந்தவை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.