Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

சர்வதேச அளவில் தாறுமாறாக விலை உயர்ந்ததால் இந்தியாவில் தங்கத்தின் நுகர்வு 29 சதவீதம் சரிவு: உலக கோல்டு கவுன்சில் அதிர்ச்சி தகவல்

மும்பை: சர்வதேச அளவில் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு எகிறியதால் இந்தியாவில் அதன் நுகர்வு தேவை 29 சதவீதம் அளவுக்கு பெரும் சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவில் பாரம்பரியமாக தங்கம் வாங்குவது ஒரு முக்கிய முதலீடாகவும், கலாசார சடங்காகவும் தொடர்ந்து பார்க்கப்பட்டு வருகிறது. கடந்த 2025ம் ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் நாட்டின் தங்கத்தின் ஒட்டுமொத்த தேவை 229.8 டன்னாக பதிவாகி இருந்தது. இந்நிலையில், உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையின்படி, நடப்பு இந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் இந்தியாவின் தங்கத் தேவை 29 சதவீதம் வீழ்ச்சியடைந்து 162.5 டன்னாகக் குறைந்துள்ளது.

இறக்குமதி வரி உயர்வு, விண்ணை முட்டும் விலை ஏற்றம் மற்றும் தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறு பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோள் போன்றவை இந்த கடுமையான சரிவுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. இருப்பினும், சந்தையில் விலை கிடுகிடுவென உயர்ந்த காரணத்தால், வர்த்தக ரீதியான தங்கத்தின் ஒட்டுமொத்த பண மதிப்பு கடந்த ஆண்டைவிட 3 சதவீதம் உயர்ந்து 2 லட்சத்து 41 ஆயிரத்து 900 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும், நடப்பு முழு ஆண்டிலும் நாட்டின் தங்கத் தேவை 625 டன் முதல் 675 டன் வரை மட்டுமே இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆபரணத் தங்கத்திற்கான நுகர்வு தேவை 20 சதவீதம் குறைந்து 99.9 டன்னாக சரிந்த போதிலும், அதன் மதிப்பு 16 சதவீதம் உயர்ந்து 1 லட்சத்து 48 ஆயிரத்து 700 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதேபோல் தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்களின் விற்பனை தேவை 40 சதவீதம் சரிந்து 55 டன்னாகவும், முதலீட்டு நிதியான தங்க இ.டி.எப். தேவை 50 சதவீதம் குறைந்து 5.3 டன்னாகவும் பலத்த சரிவை சந்தித்துள்ளது.

இதுகுறித்து உலக தங்க கவுன்சில் இந்திய தலைமை செயல் அதிகாரி சச்சின் ஜெயின் கூறுகையில், ‘அதிகரித்து வரும் விலை உயர்வு வாடிக்கையாளர்களின் வாங்கும் திறனில் மாற்றத்தை ஏற்படுத்திய போதிலும், இந்திய மக்கள் தொடர்ந்து தங்கத்திற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். திருமணங்கள் மற்றும் தென்னிந்திய பண்டிகைகள் காரணமாக பழைய நகைகளை கொடுத்து புதிய நகைகளை மாற்றும் முறை தற்போது அதிகரித்துள்ளது’ என்று தெரிவித்தார். விண்ணை முட்டும் விலை உயர்வு சாமானிய மக்களை முடக்கியுள்ள நிலையில், மக்கள் நகைகளை வாங்குவதை குறைத்து பணத்தை சேமிக்கும் புதிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.