Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மூலதன செலவு 13% கூட எட்டவில்லை; தமிழக அரசு 4 மாதங்களில் ரூ.32,925 கோடி கடன் வாங்கியது: வரவைவிட ரூ.25,267 கோடி செலவு அதிகம்; தமிழக அரசுக்கு நிதிச்சுமை அதிகரிப்பு

சென்னை: தமிழக அரசின் 2026-27ம் நிதியாண்டின் முதல் 4 மாதங்களுக்கான நிதிநிலை விவரங்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் அரசுக்கு ரூ.89,718 கோடி வருவாய் கிடைத்துள்ள நிலையில், மொத்த செலவு ரூ.1.23 லட்சம் கோடியாக உள்ளது. இதனால் வருவாயை விட செலவு ரூ.25,267 கோடி அதிகமாகியுள்ளது. ஜூலை மாதம் வரையிலான தமிழக அரசின் கணக்குகளை இந்திய கணக்கு தணிக்கைத் துறை (CAG) இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரை தமிழக அரசு ரூ.32,925.09 கோடி கடன் மற்றும் பிற பொறுப்புகள் மூலம் நிதி திரட்டியுள்ளது.

ஜூன் மாத இறுதியில் ரூ.20,881 கோடியாக இருந்த கடன், ஜூலை மாதத்தில் மட்டும் ரூ.12,044 கோடி அதிகரித்துள்ளது. அதாவது, ஒரே மாதத்தில் ரூ.12 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கடன் பெறப்பட்டுள்ளது. 2026-27ம் ஆண்டுக்கான தமிழக அரசின் மொத்த வருவாய் வரவு இலக்கு ரூ.3,44,575.31 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜூலை இறுதி வரை ரூ.89,718.47 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. இது பட்ஜெட் இலக்கில் 26.04 சதவீதம். ஜூலை வரை அரசின் வருவாய் செலவு ரூ.1,14,985.02 கோடியாக உள்ளது. இதனால் வருவாய் பற்றாக்குறை ரூ.25,266.55 கோடியாக உயர்ந்துள்ளது. அரசின் மொத்த செலவு ரூ.1,22,715.53 கோடியாக உள்ளது.

இதற்கு மாறாக, வருவாய் வரவு ரூ.89,718.47 கோடி மட்டுமே. பழைய கடன்களுக்கான வட்டியாக முதல் 4 மாதங்களில் ரூ.21,175.73 கோடி செலுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்துக்கு ரூ.17,237.16 கோடி செலவிடப்பட்டுள்ளது. இரண்டையும் சேர்த்தால் ரூ.38,412.89 கோடி. புதிய சாலைகள், கட்டிடங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மற்றும் சொத்துகளை உருவாக்குவதற்கான மூலதனச் செலவுக்காக 2026-27ம் ஆண்டில் ரூ.59,602.71 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜூலை இறுதி வரை இதில் ரூ.7,730.51 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. கடந்த 2025-26ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் தமிழக அரசின் வருவாய் ரூ.85,876 கோடியாகவும், மொத்த செலவு சுமார் ரூ.1.09 லட்சம் கோடியாகவும் இருந்தது. அப்போது பெறப்பட்ட கடன் ரூ.30,956 கோடி.

இந்த ஆண்டில் இதே 4 மாதங்களில் வருவாய் ரூ.89,718 கோடியாக உயர்ந்திருந்தாலும், கடன் ரூ.32,925 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் ரூ.1,969 கோடி கூடுதல் கடன் பெறப்பட்டுள்ளது. முதல் 4 மாதங்களிலேயே ரூ.25 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.மேலும், கடன் தொகை ரூ.32,925 கோடியை தாண்டியுள்ள நிலையில், அதற்கான வட்டி செலவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வருவாயை அதிகரிப்பது, செலவுகளை கட்டுப்படுத்துவது, வளர்ச்சிப் பணிகளுக்கான நிதியை அதிகரிப்பது ஆகியவை தமிழக அரசுக்கு முக்கிய நிதி சவால்களாக உருவெடுத்துள்ளன.