எந்த கம்பி கேட்டுக்களும், அறைகளும் இல்லாமல் சிறைக்குள் வைத்திருப்பது போல் திரைக்குள் வைத்திருக்கிறது எலக்ட்ரானிக் கருவிகள். ஸ்க்ரீன் டைம் என்பது இன்று நாம் தவிர்த்தால் கூட வேலை, படிப்பு, ஆன்லைன் வகுப்புகள் , சந்திப்புகள் என அனைத்தும் மொபைல், கணினி என மாறிவிட்டது. இப்போது கூடுதலாக இன்ஸ்டாகிராம், யூடியூப் என நம்மை ஆட்க்கொண்டிருக்கும் நிலையில் தூக்கமின்மை, லைஃப் ஸ்டைல் மாற்றம் வாழ்க்கை என மேலும் இந்த ஸ்க்ரீன் டைம் சருமத்தை வெகுவாக பாதிக்கின்றன. அதிலும் டீனேஜ் மக்கள் இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது புள்ளி விபரம். ஸ்க்ரீன் டைம்+ சருமப் பிரச்னை + மன அழுத்தம் என இது ஒரு தொடர் செயின் ரியாக்ஷனாக மாறியிருக்கிறது. முதலில் ஆணி வேறான ஸ்கிரீன் டைம் கட்டுப்படுத்துவது எப்படி? சொல்கிறார் மருத்துவ உளவியலாளர் எஸ். வந்தனா.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் டீன் ஏஜ்
பசங்க அதிக நேரம் செல்போன் மற்றும் கணினி திரைகளைப் பார்ப்பதால், கண் கருவளையம் மற்றும் சருமச் சோர்வு ஏற்பட்டு மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். ப்ளூ லைட், தூக்கமின்மை, எப்போதும் அறைக்குள் அடைந்து கிடைத்தல் ( Sedantary Habits) காரணமாக வைட்டமின் டி குறைபாடு. இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் வரும் விளம்பரங்களைப் பார்த்து அழுத்தம் (Peer Pressure ) தீவிர ரசாயன சீரம்களையும் க்ரீம்களையும் தங்கள் வயதுக்கு உகந்ததா என்று தெரியாமலேயே தினமும் பயன்படுத்துகின்றனர்.
பருவ வயதில் பருக்கள் வருவது இயல்பானது என்றாலும், நண்பர்களின் கிண்டல், போலியான இணைய வாக்குறுதிகளை நம்பியும் இந்த ரசாயனப் பொருட்களைத் தொடர்ந்து பூசுவதால், 15 வயதிலேயே 40 வயதுக்குரிய சரும வறட்சியும் முதிர்ச்சியும் அடைந்து அவதிப்படுகின்றனர். மேலும், ஆடை கலாச்சாரத்தில் ஏற்படும் மாற்றங்களும், குடும்பத்தினருடன் பேசாமல் தனித்தனி அறைகளில் செல்போனுடன் முடங்குவதும் பெரிய இடைவெளியை உருவாக்கி, மனதளவில் அவர்களைத் தனிமைப்படுத்தி தவறான பாதைகளுக்கு வழிவகுக்கிறது.
இதற்குத் தீர்வாக ஆணிவேர் பிரச்சினையான ஸ்க்ரீன் டைம் குறைப்பு மட்டுமே.செயற்கை ரசாயனங்களைத் தவிர்த்துச் சமையலறையிலும் உணவிலும் உள்ள காய்கறிகள், பழங்கள் மற்றும் நீர்ச்சத்துமிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும். நிறையத் தண்ணீர் குடிக்கும்போது உடலின் நச்சுக்கள் வெளியேறி சருமம் இயற்கையாகவே பொலிவுறும். அதிலும் லேப்டாப் போன்ற அதீத வெப்பம் வெளியிடும் எலக்ட்ரானிக் கருவிகளை பயன்படுத்துகையில் தண்ணீர் நிறைய எடுக்க வேண்டும் பெற்றோர்கள் முதலில் செல்போன் பயன்பாட்டைக் குறைத்து குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருப்பதுடன், மாலை நேரங்களில் குடும்பமாக அமர்ந்து பேசுவது, இசை கேட்பது மற்றும் மாற்றுப் பொழுதுபோக்குகளில் அவர்களை ஈடுபடுத்துவது அவசியம். அவ்வப்போது குளிர்ச்சியான இயற்கை சூழலில் குடும்பத்துடன் நேரம் செல விடுவது அவசியம். திரையிலிருந்து விலகி இயற்கையான வாழ்வியலை குழந்தைகளுக்குக் கொடுப்பதே ஒரே தீர்வு.
ஸ்க்ரீன் டைம் காரணமாக வரும் சரும பிரச்னைகளை எப்படி தீர்க்கலாம். சொல்கிறார் அரோமா தெரபிஸ்ட் மற்றும் சரும நிபுணர் கீதா அசோக்.
இணையத்தில் வரும் மேக்கப், காஸ்மெட்டிக்ஸ் விளம்பரங்களை அவர்கள் உண்மை என்று அப்படியே நம்பிவிடுகிறார்கள். குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் யாரோ ஒரு நபர் “இதைப் பயன்படுத்தினால் இரண்டு நாளில் வெள்ளையாகிவிடலாம்” என்றோ, “இந்தச் சீரம் பயன்
படுத்தினால் பருக்களே வராது” என்றோ சொல்வதை மருத்துவரின் ஆலோசனை போல எடுத்துக் கொள்கிறார்கள்.
இன்றைக்குச் சந்தையில் மிகவும் பிரபலமாக இருக்கும் நையாசினமைடு (Niacinamide), குளுடாதயோன் (Glutathione), கோஜிக் அமிலம் (Kojic acid), ரெட்டினால் (Retinol), கிளைகாலிக் அமிலம் (Glycolic acid) போன்ற வீரியமிக்க வேதிப்பொருட்களைக் (Chemicals) குழந்தைகள் தங்களின் வயதுக்கும் சருமத்திற்கும் ஏற்றதா என்று யோசிக்காமல், ஏதோ வழக்கமான மேக்கப் பொருட்கள் போலத் தினமும் பயன் படுத்தத் தொடங்கிவிடுகிறார்கள். இது முற்றிலும் தவறு.
உதாரணத்திற்கு, என் கிளினிக்கிற்கு வந்த ஒரு சிறுமியின் கதையையே சொல்கிறேன். பருக்கள் (Acne / Pimples) வரக்கூடாது என்பதற்காகப் பருக்களுக்கான மருத்துவக் கிரீமைத் தினமும் ஃபெளண்டேஷன் (Foundation) போலத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தியிருக்கிறாள். அதாவது பிரச்னையே இல்லாமல் பிரச்னைக்கான மருந்து எடுத்தல். விளைவு, ஒரு வருடத்தில் பருக்கள் குறைந்தாலும், அவளுடைய சருமத்தில் இருந்த இயற்கை ஈரப்பதம் போய், 15 வயதிலேயே 40 வயதிற்குரிய முதிர்ச்சி வந்ததுதான் மிச்சம். அவளது சருமத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர எனக்கு ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகள் வரை தீவிர சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது”.
இதுமட்டுமல்லாமல், நண்பர்கள் அல்லது சக மனிதர்களின் தூண்டுதலால் ஏற்படும் ஒப்பீடுகளும் மிகப்பெரிய மன உளைச்சலை உண்டாக்குகின்றன. “அவள் அழகாக இருக்கிறாள், நான் கருப்பாக இருக்கிறேன்” என்ற தவறான புரிதலால், ஆரோக்கியமான சருமத்தையும் தலைமுடியையும் தவறான அழகு சாதனப் பொருட்களைக் கொண்டு பாழாக்கிக் கொள்கிறார்கள். தொடர்ந்து திரையைப் பார்ப்பதால் கண்ணைச் சுற்றிக் கரு வளையங்கள் (Dark circles) வருவதும், கண்கள் சோர்வடைவதும் தனிப் பிரச்னை.
தினமும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது, தக்காளி, வெள்ளரிக்காய், தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளையும் பழங்களையும் உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்வது போன்றவை உடலில் உள்ள நச்சுக்களைச் (Toxins) சிறுநீர் வழியாக வெளியேற்றி, சருமத்திற்கு இயல்பான பொலிவைத் தரும்.
இயற்கை நமக்குக் கொடுத்திருக்கும் சருமத்தைக் கெமிக்கல்களால் பாழாக்காமல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையாலும் சரியான இயற்கை உணவு களாலும் பராமரிப்பதே என்றும் நிரந்தரமான அழகைத் தரும். முக்கியமாக பெற்றோர்கள், அதிலும் அம்மாக்கள் தான் குழந்தைகள் என்ன கிரீம் பயன் படுத்துகிறார்கள் , என்பதை எல்லாம் கவனிப்பது அவசியம்”.
- ஷாலினி நியூட்டன்


