Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேற்கு தொடர்ச்சி மலையில் பரவலான மழை: பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப் அருகே உள்ள மொத்தம் 72 அடி கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணைக்கு,மழைக்காலங்களில் மலை முகடுகளில் இருந்தும், சோலையார் அணையிலிருந்தும் தண்ணீர் வருகிறது.இந்த அணைக்கு வரும் தண்ணீர்,ஒவ்வொரு ஆண்டும் தூணக்கடவு அணைக்கு திறக்கப்பட்டு,அங்கிருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு பாசனத்திற்காக செல்வது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதம் வரை ஏற்பட்ட வறட்சியால், நீர்வரத்து மிகவும் குறைந்ததுடன், ஏப்ரல் இறுதியில் அணையின் நீர்மட்டம் 15 அடியாக தரைதட்டியது.

இந்நிலையில், கடந்த மே மாதம் பெய்த கோடை மழைக்கு பிறகு, ஜூன் மாதம் இரண்டாவது வாரத்திலிருந்து பெய்ய துவங்கிய தென்மேற்கு பருவமழையால்,பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்தது. பலநாட்களில் பகல் இரவு என தொடர்ந்து பெய்த கனமழையால் நீர்தேக்க பகுதியிலிருந்தும், சோலையார் அணையிலிருந்தும் பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து வழக்கத்தைவிட அதிகரித்தது.இதனால், இரண்டு வாரத்துக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 71 அடியாக எட்டியது.தொடர்ந்து பெய்த தென்மேற்கு பருவமழையால், பலநாட்களாக பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு சுமார் 2 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வரத்து இருந்தது.  கடந்த ஒரு வாரமாக மழை குறைவாக இருந்தாலும்,மலை முகடுகளிலிருந்தும்,சோலையார் அணையிலிருந்தும் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 2000 கன அடியாக இருந்தது. பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால்,நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 71.20அடியாக உயர்ந்து கடல் போல் ததும்புகிறது. பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் முழு அடியை எட்டியவாறு பல நாட்களாக நீர்மட்டம் உயர்ந்து காணப்படுவதால், பாசனத்துக்கு போதுமான தண்ணீர் கிடைக்க பெறும் என்ற நம்பிக்கையில், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.