Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

வருமான வரி பாக்கியை செலுத்தாவிட்டால் ஜெயலலிதா சொத்துகளை ஏலம் விட நடவடிக்கை: வருமான வரித்துறை ஐகோர்ட்டில் தகவல்

சென்னை: ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி மற்றும் செல்வ வரி பாக்கி வட்டியுடன் சேர்த்து 20 கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளதாகவும், வரி பாக்கியை செலுத்தாவிட்டால் முடக்கம் செய்யப்பட்ட சொத்துகளை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி பாக்கி 13 கோடி ரூபாயை செலுத்துமாறு அவரது சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து, தீபா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மற்றொரு வாரிசான தீபக்கும் வழக்கில் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தீபா தரப்பில், வருமான வரி பாக்கி முதலில் 36 கோடி ரூபாய் என்றும் பின்னர் 13 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சரியான தொகையை தெரிவித்தால் செலுத்த தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வரி பாக்கி குறித்து பதில்மனு தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், அதுவரை வரி பாக்கி வசூல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.பி.சீனிவாசன், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கி குறித்து பதில்மனு தாக்கல் செய்தார்.

அதில், 2026 ஜனவரி 31ம் தேதி வரையிலான காலகட்டத்துக்கு வருமான வரி பாக்கி வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 17 ஆயிரத்து 962 ரூபாயும், செல்வ வரி பாக்கி 11 கோடியே 8 லட்சத்து 8 ஆயிரத்து 730 ரூபாயும் செலுத்தப்பட வேண்டும். ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக், 6 கோடியே 75 லட்சத்து 32 ஆயிரத்து 342 ரூபாயை ஆறு தவணைகளாக செலுத்துவதாகக் கூறி ஒரு கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளார். வரி பாக்கியை செலுத்தாவிட்டால், முடக்கப்பட்ட சொத்துகளை ஏலம் விட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு, வரும் 18ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.