வரி ஏய்ப்பு புகார்: ட்ரூகாலர் அலுவலகங்களில் வருமான வரி சோதனை
புதுடெல்லி: வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள ட்ரூகாலர் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். சுவீடன் நாட்டை சேர்ந்த ட்ரூகாலர் நிறுவனம் தனது ஆப் மூலமாக, செல்போனில் சேமிக்கப்படாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை அடையாளப்படுத்தி, விளம்பர அழைப்புகளை தடுக்க உதவுகிறது. உலகெங்கிலும் சுமார் 4.25 கோடி பேர் இந்த ஆப்பை பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் ட்ரூகாலர் அலுவலகங்கள் பெங்களூரு, மும்பை, குருகிராமில் உள்ளன. இந்நிலையில், இந்நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறைக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன.
அதன் அடிப்படையில் ட்ரூகாலர் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். வருமான வரி தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர். ட்ரூகாலர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘வருமான வரி சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறோம். எங்கள் நிறுவனம் அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு வெளிப்படையாக செயல்படுகிறது’ என கூறி உள்ளது.